அபாக்கா. அழகான பெண். அவள் அழகிற்கு மெருகூட்டியது அவள் வகித்த பதவி. ஆம். அபாக்கா, உள்ளல் என்ற சிறிய துறைமுக நகரத்தின் ராணி அவள். உள்ளல், மங்களூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அவளைத் தூரத்தில் இருந்து, அவள் பார்க்காமல் தான் அவளது அழகைக் கண்டு ரசித்தார்களே தவிர, நேருக்கு நேர் நின்று பார்க்க யாருக்கும் துணிவில்லை.
காரணம் அவளது தோரணை. அவளிடத்தில் ஆணவம் இல்லை. ஆனால் துணிவு இருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவள் தைரியமாக நேருக்கு நேர் பார்த்துப் பேசுவாள். அவள் குரலில் தொணிக்கும் வீரத்தைக் கண்டவர்கள், அவளிடம் பேசும் போது, நிதானித்துத் தான் பேசுவார்கள்.
எத்தனையோ முறை, பல தேசத்தைச் சேர்ந்த மிகப்பெரிய வணிகர்கள் எல்லாம், உள்ளல் துறைமுகத்திற்கு, வணிக ரீதியாக வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்கள், அபாக்கா ராணிக்கு, ஏதாவது விலை உயர்ந்த ஆபரணங்களை, மற்றும் அவர்கள் தேசத்து பட்டாடைகளை அன்பளிப்பாகத் தர முன் வருவார்கள். அந்த மாதிரியான தருணங்களில், அவளது உதடுகள் ஒரு சின்னக் கீற்றுப் புன்னகையுடன், அவற்றை மறுத்து விடும். தனக்கு தேவைப்பட்டதை விலை கொடுத்து வாங்கிப் பழகியவள்.
அபாக்கா மங்களூரின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசாக செயல் பட்டாலும், அவள் கோட்டை கொத்தலங்கைள அமைத்திருந்த அந்த உள்ளல் என்ற இடம், கடற்கரையை ஒட்டிய பெரிய துறைமுகத்தைச் சார்ந்திருந்தது. அவள் தனது அரண்மனை மேல் இருந்து பார்த்தாலே, தூரத்தில் வரும் கப்பல்கள் எல்லாம் தெரியும்.
அதை தெரிந்து கொள்ள தொலைநோக்கு கண்ணாடி போன்ற நவீன உபகரணங்களையும் வைத்திருந்தாள். வாணிபச் செழிப்பு மிக்க துறைமுகம் என்பதால், எந்த ரூபத்தில் எதிரிகள் வந்தாலும், அவர்கள தாக்குவதற்காக, பீரங்கி முதலான, அந்தக் கால நவீன ஆயுதங்களையும் கோட்டைக் கொத்தளங்களில் நிறுத்தி வைத்திருந்தாள்.
அடிக்கடி மங்களூர் கடல் வழியே செல்லும், போர்த்துக்கீசியர்கள் இந்த துறைமுகத்தை ஒரு நோட்டம் விட்டுத் தான் செல்வார்கள். அன்றைய காலத்தில், போர்ச்சுக்கீசியர்கள் தான் கடல் வாணிபத்தில் உலகமெங்கும் பவனி வந்து கொண்டிருந்தார்கள்.
1498-ல், தற்போது கேரளாவில் உள்ள கோழிக்கோடு துறைமுகத்திற்கு வந்த வாஸ்கோடகாமா, முதன் முதலாக காலடி எடுத்து வைத்த போது தான், நம் இந்தியாவில் இருந்த வளங்கள் எல்லாம் அந்தக் கொள்ளையன் கண்களை உறுத்தின.
கேரளாவில் மிளகை வாங்கித் தன் நாட்டில் அதிக விலைக்கு விற்க எண்ணி வந்தவன், செல்வச் செழிப்பாக இருந்த இந்தியா மீது பொறாமை கொண்டான். அவன் சொல்லித் தான் போர்ச்சுக்கீசியர்களுக்கு, இந்தியா பணக்கார நாடு என்பதை அறிந்தனர்.
நமது கடல் வாணிபத்திற்குத் துணையாக இருக்கும் துறைமுகங்கள் எல்லாம், அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரங்களாக இருந்ததையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. எனவே திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.
1525 – ஆம் ஆண்டு. ஒரு நாள் அதிகாலை, ஒற்றன் ஒருவன் மூச்சிறைக்க ஓடி வந்தான். அவன் அவசர செய்தி என்று சொன்னதால், அபாக்கவிற்குத் தகவல் போனது. விரைந்து சபைக்கு வந்தாள். போர்ச்சுக்கீசியர்கள் திடீரென்று ஏராளமான கப்பல்களில் படை வீரர்களுடன், தங்களது உள்ளல் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, ஒற்றன் சொன்ன செய்தயைக் கேட்டதும், அவள் பதறவில்லை. ஒரு நிமிடம் யோசித்தாள்.
தளபதியை அழைத்து, தனது காலாட் படைகளை எல்லாம் கடற்கரையைச் சுற்றி, துப்பாக்கிகளுடனும், வில் அம்புகளுடன் நிற்க உத்தரவிட்டாள். கோட்டையின் மேல் மாடத்திற்குச் சென்றாள். தொலை நோக்கி வழியே பார்த்தாள். பனி காலத்தின் மங்கலான வெளிச்சத்தில், போர்ச்சுக்கீசியர் கப்பல்களில் ஆயுதங்களுடன் வருவது தெரிந்தது.
அடுத்து, அவள் உத்தரவுப்படி பீரங்கிகளில் இருந்து அனலைக் கக்கிக் கொண்டு, தீப்பிழம்பாக குண்டுகள் பறந்தன. கரையை நெருங்கிக் கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களின் கப்பல்கள் எல்லாம் தூள் தூளாகின.
கப்பலில் இருந்து தாக்க முயன்றவர்களை, அவளது படையினரின் அம்புகள் துளைத்தன. பின்னால் வந்த கப்பல்கள், விபரீதத்தைப் புரிந்து கொண்டு கப்பலைத் திருப்பி விட்டனர்.
போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து போரிட்டு வென்று தங்களைக் காத்து அபயம் அளித்ததால், உள்ளல் நாட்டு மக்கள் அவளை அபய ராணி என்று அழைத்தார்கள். அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்து, போரிட்டு வென்ற முதல் பெண்மணி ராணி அபாக்கா தான்!