அமெரிக்கா: வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதால், இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வழங்கிய பரிந்துரைகளில் மாற்றம் செய்து, வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா பெறுவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்குவது குறித்து அமெரிக்க குடியுரிமைத்துறை பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம், தகவல் தொழில்நுட்பப் பணிகளில் வெளிநாட்டவரை விட அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அதிபர் ட்ரம்பின் கொள்கையை நடைமுறைப் படுத்தும் வகையில் விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், இந்திய இளைஞர்களுக்கான அமெரிக்க வேலை வாய்ப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க குடியுரிமையாக கருதப்படும் அமெரிக்காவின் க்ரீன் கார்ட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்கள் மற்றும் பணி காலத்தை நீட்டிக்க மனு அளித்துவர்கள் அனைவரின் கோரிக்கைகளும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான ஐடித்துறையைச் சேர்ந்த இந்தியவர்கள் விரைவில் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்கர்களை பாதுகாப்போம், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம் என்ற டிரம்பின் தாரக மந்திரமே அவரின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.