தலைமுடி உதிர்வதைத் தாங்கிக்கொள்ள முடியாத இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை இடம்பெற்றுள்ளது.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் மித்துன்ராஜ் (27). இவர் பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தவர். மித்துன்ராஜின் தலையில் சரும நோய் ஒன்று ஏற்பட்டது. இதனால் அவரது தலைமுடி வேகமாக உதிர ஆரம்பித்துள்ளது.
கை நிறையச் சம்பளம் வாங்கிய மித்துன், அதில் கணிசமான அளவு பணத்தை தலைமுடி பிரச்சினைக்காகவே செலவிட்டு வந்தார். எனினும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
தந்தையை இழந்துவிட்ட தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க மித்துனின் தாய் வசந்தி பெருமுயற்சி செய்துவந்தார். ஆனால், முடிப் பிரச்சினையால் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்க்க முடியாத நிலைக்கு மித்துன் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில், புதுவருட விடுமுறையில் வந்த மித்துன்ராஜ் தாயிடம் தனது முடிப் பிரச்சினை குறித்தே பெரிதும் பேசியிருக்கிறார். எல்லாம் சரியாகிவிடும் என்று அவரது தாயும் ஆறுதல் கூறியிருக்கிறார்.
தாயின் ஆறுதல் வார்த்தைகளால் தேறுதல் அடையாத மித்துன்ராஜ், ஞாயிறன்று தனது தாய் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய வசந்தி மகனின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்து அயலவர்கள் உதவியுடன் மித்துனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார். எனினும் மித்துன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.