வடக்கில் பூதாரகரமாக உருவெடுத்துள்ள போக்குவரத்து பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைக்கப்பபெற்றுள்ளது.
இதன்படி வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இன்று காலை முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து 40:6 0என்ற பங்கீட்டு முறையில் சேவையை முன்னெடுப்பதற்கு வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை சம்மதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு தை மாதம் 195 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
திறந்த அன்று தவிர ஒரேயொரு நாள்கூட கடந்த வருடத்தில் அந்த நிலையத்தில் இருந்து சேவைகள் இடம்பெற்றதில்லை.
வடமாகாண முதலமைச்சரினால் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்திற்கு அனைவரையும் செல்லுமாறு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தனியார் பேருந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வரும் நிலையில், இ.போ.ச சபையினர் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள 130 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வந்தார்கள்.
இதையடுத்து, கொழும்பிலிருந்து சென்ற குழுவினருக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும், இ.போ.சபையினருக்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.