வவுனியா வர்த்தக சங்கத் தலைவரினால் பழைய பேருந்து நிலையத்தை சூழவுள்ள வர்த்தகர்களுக்கு ஆதரவு கோரி விடுக்கப்பட்ட கோரிக்கையையும் மீறி நகர வர்த்தகர்கள் இன்று கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.சுமார் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, 11 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதிய பேருந்து நிலையத்திற்கு இ.போ.ச பேருந்துகள் சென்று சேவையில் ஈடுபட மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், வவுனியா பழைய பேருந்து நிலையம் வட மாகாண முதலமைச்சரின் உத்தரவையடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதுடன், இந்த பகுதியில் இயங்கி வந்த இ.போ.ச பேருந்து சேவையாளர்கள் பகிஸ்கரிப்பில் மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.அத்துடன் பழைய பேருந்து நிலையம் அமையப்பெற்ற இடத்தில் உள்ள வர்த்தகர்களும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவைகளையாவது செயற்படுத்த வேண்டும் என கோரி கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை, இந்த வர்த்தகர்களினால் வவுனியா வர்த்தகர் சங்கத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வர்த்தகர் சங்கம் கூடி ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானித்தது.இந்த நிலையில், வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிரிதரன் அனைத்து வர்த்தகர்களையும் பூரண கதவடைப்புக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.