நலன்புரி (Welfare)
- வேலை தேடுபவர்கள் போதைப் பொருட்கள் பாவனை செய்தால் அவர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை நிறுத்தப்படவேண்டும் என்ற சட்ட முன்வடிவை செனட் சபை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள நிலையில், இது சட்டமாக்கப்படாத போதும், குறித்த மருத்துவ சோதனைகளுக்காக $ 10 மில்லியன் டொலர்கள் ஒதுக்கி வைக்கப்படும்.
- தம் குழந்தைகளைத் தனியாக வளர்ப்பதற்காக (single parent) பெற்றோர் பெறும் மானியம் பெற, அவர்களது உறவுமுறை குறித்து உறுதி செய்யப்படும்.
- இளைஞருக்கான கொடுப்பனவு குறைந்தது $ 4.60 உயர்கிறது, மற்றும் மாணவர் பெறும் மானியம் $ 8.30 உயரும், மாற்றுத்திறனாளிகள் பெறும் ஆதரவுத் தொகை $ 7 உயர்கிறது.
- பராமரிப்பு சேவை வழங்குபவர்களுக்கான மானியம் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு, வாரத்திற்கு $ 1.20 கூடுதலாக வழங்கப்படும்.
வீட்டு வசதி
புதிய வீட்டு உரிமையாளர்கள், வாடகை வீட்டைப் பராமரிக்கும் செலவு, மற்றும் ஆய்வு செய்ய செலவாகும் தொகையை செலவு என்று வரி கட்டும்போது கோர முடியாது. வீட்டு வசதி மேலுள்ள அழுத்தத்தைக் குறைக்க 2017-18 வரவு செலவுத் திட்டத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வி
- Gonski 2.0 நிதியளிப்பு மாதிரியின் அடிப்படையில் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும். இந்த மாற்றம், நிதி வழங்கலில் அடிமட்டத்திலுள்ள பள்ளிகளில் ஆறு ஆண்டுகளுக்குள்ளும், நிதி வழங்கலில் மேல்மட்டத்திலுள்ள பள்ளிகளில் பத்து ஆண்டுகளுக்குள்ளும் நடைமுறைப்படுத்தப்படும்.
- பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படும் காமன்வெல்த் நிதி ஒதுக்கீடு 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு அளவில், இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்படும்.
- நாட்டுக்கு என்ன தேவை, தொழில் நிலையங்களின் தேவை, திறன்களின் தேவை, மற்றும் வேலைவாய்ப்பு விளைவுகளுடன் ஒப்பிட்டுத்தான் தொழிற் கல்வி மற்றும் பயிற்சி (VET) க்கான மாணவர் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
- கல்விக்காக வழங்கப்படும் காமன்வெல்த் உதவித் தொகைகளுக்குப் புதிய உச்ச வரம்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அனேகமான மாணவருக்கு அது $104,444 ஆகவும், மருத்துவ, பல் மருத்துவ, கால்நடை மருத்துவ, மற்றும் அறிவியல் துறை மாணவர்களுக்கு அது $150,000 ஆகவும் அமையும்.
- வெளிநாடுகளிலிருந்து மீள நாடு வரும் அல்லது வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடமாற்றப் புலமைப்பரிசில் இனிமேல் வழங்கப்படாது.
கடவுச்சீட்டு (Passport
10 வருட ஆஸ்திரேலிய கடவுச்சீட்டிற்கான கட்டணம் ஐந்து டொலரால் அதிகரித்து $282 ஆகிறது. 5 வருட ஆஸ்திரேலிய கடவுச்சீட்டிற்கான கட்டணம் $142 ஆக $3 அதிகரிக்கிறது.
சுகாதாரம்
பிறப்புறுப்பு மருக்களுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பு மருந்து தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் (National Immunisation Program) பட்டியலிடப்பட்டுள்ளது.
மூன்று மருந்துகள் Pharmaceutical Benefit Scheme (PBS) எனப்படும் சலுகை விலையில் மருந்து வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன: Myeloma எனப்படும் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் Carfilzomib, நுரையீரல் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் Alectinib, cystic fibrosis எனப்படும் நோய்க்குப் பயன்படுத்தப்படும் Mannitol ஆகியவற்றிற்கு நோயாளிகள் கட்ட வேண்டிய தொகை முன்னரை விட மிகக்குறவாகின்றன.
ஆஸ்திரேலிய பாதுகாப்புப்படையிலிருந்து ஓய்வுபெற்றார்கள் நோய் தடுப்பு மற்றும் இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்துகளும் PBS எனப்படும் சலுகை விலையில் மருந்து வழங்கும் திட்டத்தில் வாங்க முடியும்.
Northern Territory இலுள்ள Tindal இராணுவ முகாமிலிருந்து வெளியான நச்சுப் பொருட்கள் அயலில் உள்ளவர்களது நீர் விநியோகங்களைப் பாதித்துள்ளதால், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 5.7 மில்லியன் டொலர்களை அரசாங்கம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும்.
வரிகள்
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான $ 12,000 சிறப்பு வரி நீக்கப்படுகிறது.
உரிமங்கள்
Bronwyn Bishop மற்றும் Sussan Ley உட்பட ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உரிமங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு புதிய நாடாளுமன்ற செலவினங்கள் முறை நடைமுறைக்கு வருகிறது.
இந்த மாற்றங்களுக்கும் அப்பால், 2018ல் அறிமுகமாகும் வேறு சில மாற்றங்கள்:
பிளாஸ்டிக் பைகள் தடை
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் இந்த வருடத்திலிருந்து பெரிய பல்பொருள் அங்காடிகளில் கிடைக்காது. அதன் பயன்பாட்டை Woolworths, Coles, BigW, BWS, Harris Farm Markets என்பன இந்த வருடத்திலிருந்து தடை செய்கின்றன.
ஓரின திருமணம்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் 7ம் தேதி ஓரின திருமணத்தை சட்டமாக்கியதால், இந்த வருடத்திலிருந்து ஓரின திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்படும்.
Cashless Debitcard
மானியம் பெறுபவர்களுக்குப் பணமாக வழங்காமல், நாணய அட்டையில் பணத்தை வைப்பு செய்வதன் மூலம், பயனாளிகள் அனாவசிய செலவுகளைச் செய்யாமல் தடுக்க அரசு முனைகிறது. இதற்காக இரண்டு இடங்களில் ஏற்கனவே பரீட்சித்துப்பார்த்து விட்டதால், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு இது விரிவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் Goldfields பகுதி மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Bundaberg மற்றும் Hervey Bay பகுதிகள். புதிய இடங்களுக்கு, இந்த ஆண்டின் முற்பகுதியிலிருந்து Cashless Debitcard அறிமுகமாகின்றன.
வீசாக்கள்
- 2018 ஆம் ஆண்டில், தற்போதைய 457 வீசா நிரல் அகற்றப்பட்டு, புதிய TSS வீசா நிரல் அறிமுகமாகும். TSS வீசா இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கிறது.
- நீண்டகால மற்றும் நடுத்தர கால பட்டியல்களில், தங்கள் தொழில் பட்டியலிடப்படவில்லையென்றால், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
- திருமணமானவர்கள் தங்கள் துணைவரை அழைத்துவரும் வீசாவில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம். அதற்கான சட்ட முன்வடிவு, செனட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பயண செலவுகள் அதிகரிக்கலாம்
விக்டோரியாவின் CityLink, NSW மாநிலத்தின் Cross City Tunnel, Eastern Distributor, Hills M2 மற்றும் Lane Cove Tunnel, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Airportlink ஆகியவற்றின் கட்டணங்கள் அதிகரிக்கின்றன.
Codeine மாத்திரைகள் இலகுவில் கிடையாது
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் பின், Nurofen Plus, Panadeine, Mersyndol மற்றும் Codral போன்ற Codeine உள்ளடக்கிய மாத்திரைகள் வைத்தியரின் பரிந்துரையுடன் மட்டுமே கிடைக்கும்.
தனியுரிமையில் மாற்றங்கள்
பிப்ரவரி 22, 2018 முதல், ஆஸ்திரேலிய தனியுரிமை கொள்கைகள் மாறுகின்றன. அனைத்து நிறுவனங்களும் 30 நாட்களுக்குள் தகுதியுள்ள தரவு மீறல்களைப் பற்றி அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். தகுதியான தரவு மீறல் உறுதி செய்யப்பட்டால், அதில் ஈடுபட்ட ஒவ்வொரு தனிநபர் குறித்த எல்லா தரவுகளையும் நிறுவனங்கள் ஆஸ்திரேலிய தகவல் ஆணையர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
Superannuation எனப்படும் ஓய்வூதியம்
ஜூலை முதல் நாள் முதல் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் தாம் வாழும் வீட்டை விற்று, வரிச் சலுகையுடன் $300,000 வரை Superannuation எனப்படும் ஓய்வூதியத்தில் வைப்புச் செய்ய முடியும்.
முதியோருக்கான ஓய்வூதியம்
ஜூலை முதல் நாள் முதல் வயதின் அடிப்படையில் கிடைக்கும் ஓய்வூதியம் அல்லது ஊனமுற்றோரின் ஆதரவு ஓய்வூதியம் (DSP) பெற ஒரு நபர்:
- 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் குடியிருந்திருக்க வேண்டும் அதில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் ஏதாவது பணி புரிந்திருக்க வேண்டும், அல்லது
- 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் குடியிருந்திருக்க வேண்டும் அத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்த மானியத்தையும் பெறாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது
- 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு
தற்போதைய குழந்தை பராமரிப்பு மானியம் மற்றும் சிறுவர் பராமரிப்பு மானியத்திற்குப் பதிலாக, ஒரு புதிய குழந்தை பராமரிப்பு மானியம் (CCS), இந்த வருடம் ஜூலை 2ம் நாளிலிருந்து அறிமுகமாகிறது.