நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவகாசம் போதாது. அதனால் போட்டியிடப் போவதில்லை. பாராளுமன்றத் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்.
எனக்கு பதவி வேண்டுமென்று என்னியிருந்தால் 1996-லேயே என்னை பதவி தேடி வந்திருக்கும். 45 வயதில் பதவிக்கு ஆசைப்படாதவனா 65 வயதில் ஆசைப்படப் போகிறேன்.அரசியல் ரொம்ப கெட்டு விட்டது. தமிழ்நாட்டு அரசியல் ரொம்ப கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய் விட்டது.
அதிலும் குறிப்பாக கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டது, அண்டை மாநிலத்தவர்கள் தமிழகத்தை பார்த்து சிரிக்கும் நிலைக்கு தமிழகம் ஆளாகி விட்டது. மாத்தணும். எல்லாத்தையும் மாத்தணும். அரசியல் மாற்றத்துக்கு நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்றார்.
கடந்த ஓர் ஆண்டாக தமிழக அரசியல் சீர் கெட்டுவிட்டது என்றல் இத்தனை வருடங்கள் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் நிலையா இருந்தது ? இதற்கு முன்பு நடந்த ஆட்சியில் ஊழலே நடக்கவில்லையா ? 1991-96ல் நடந்த ஊழல்களை விட, அதன் பிறகு பல மடங்கு அதிக ஊழலிலும், வசூலிலும் ஜெயலலிதா ஈடுபட்டது ரஜினிக்கு தெரியாதா ? திமுக ஆட்சியில் ஊழலே நடைபெற வில்லையா ? ஆனால், இவை குறித்தெல்லாம் ரஜினிகாந்த் எப்போதுமே வாய் திறந்தது கிடையாது.
2004 ஆம் ஆண்டு சுனாமியால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, பாலிவுட்டின் ஹீரோ விவேக் ஓபராய் தமிழகம் வந்து, தமிழக மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஒரு கிராமத்தை தத்தெடுத்து சுனாமி மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால் தமிழகத்திலேயே இருந்த ரஜினி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
தன் குடும்பம், தன் திரையுலகம், அதன் வியாபாரம் என்பதில் ரஜினி காண்பித்த ஆர்வத்தை, தமிழக மக்களின் நலனிலோ, தமிழகம் சந்தித்த சிக்கல்களிலோ கடந்த 21 ஆண்டுகளாக ஒரு முறை கூட வெளிக் காட்டியதில்லை.அவ்வளவு ஏன் தன் ரசிகர்களுக்காகக் கூட ரஜினிகாந்த் எதுவுமே செய்ததில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை
ஊழலற்ற ஆட்சி என்ற முழக்கத்தையும் முன்வைக்கும் ரஜினி. அவர் நடித்த கோச்சடையான் என்கிற பொம்மை திரைப்படத்தை, அவர் மனைவி லதா, இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்தது. பெங்களுரு காவல்துறை லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யும் வரை சென்று, பின்னர் பணம் கொடுத்து சரி செய்யப்பட்டது. ரஜினியின் மகள் தொடங்கிய ஆக்கர் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த கோவா திரைப்படத்தில் பணியாற்றிய 90 சதவிகித ஊழியர்களுக்கு இறுதி வரை பணமே தரவில்லை. இறுதியில் இதுவும் நீதிமன்றம் சென்று, பின்னர் சரி செய்யப்பட்டது.
லதா ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் நடத்தி வரும், ட்ராவல்ஸ நிறுவனத்திற்கான இடத்தை வாடகைக்கு விட்ட சென்னை மாநகராட்சி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கடை வாடகையை உயர்த்துவது வழக்கம். இது போல உயர்த்தியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று, வழக்கு தாக்கல் செய்தார் லதா. உரிய வாடகையை செலுத்தாவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் கட்டிட உரிமையாளருக்கு 10 கோடி வாடகை பாக்கியை வைத்து, அவர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததும் 2 கோடியை தருவதாக ஒப்புக் கொண்டு, பின்னர் அதையும் தராமல் இழுத்தடித்ததால், ஒரு கட்டத்தில் அவர் பள்ளியை இழுத்துப் பூட்டினார்.
இவை அனைத்தும் ஒன்று ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்க வேண்டும். அல்லது, தெரிந்தே நடந்திருக்க வேண்டும். தெரியாமலே நடந்திருந்ததாக வைத்துக் கொண்டால், ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு கூட ரஜினிக்கு துப்பு இல்லை என்றே முடிவெடுக்க முடியும். தெரிந்தே நடந்திருந்தது என்றால் பேசுவதற்கு எதுவுமில்லை.
இவற்றையெல்லாம் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும். கடுமையான கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு, திமுக ஆட்சிக்கு வந்து விடப் போகிறதோ என்ற அச்சம் இருப்பதை பார்க்க முடிகிறது.மேலும், 60 ஆண்டு கால திராவிட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, வாராது ஒரு மாமணி வராது காத்திருந்தபோது, வந்தவர்தான் ரஜினிகாந்த் என்றே முடிவெடுத்திருப்பதாக தோன்றுகிறது.
நடிகராக ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு செய்தது என்ன ? அவர் ரசிகர்களுக்கு செய்தது என்ன ? அவரையே உயிராக நினைத்து அவர் பின்னால் வரும் ரசிகர்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன ? ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அபிமானத்தை எப்படி காசாக்குவது என்பதை மட்டுமே அவர் இத்தனை நாட்களாக செய்து வந்திருக்கிறார். அவரும் அவர் குடும்பமும், அவர் ரசிகர்களை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அவரின் ரசிகர்களை வைத்து பயனடைந்ததைத்தான் நாம் இது வரை கண்டிருக்கிறோம். இனியும் அதுதான் நடக்கப் போகிறது.
பெயருக்கு ஒரு கட்சியை தொடங்கி விட்டு, பிஜேபி என்ற குதிரையின் மீது சவாரி செய்து, ஆற்றைக் கடந்து விடலாம் என்து மட்டுமே ரஜினியின் திட்டமாக இருக்கும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, பிஜேபி ஒரு மண் குதிரை என்பதை ரஜினி காலம் கடந்துதான் புரிந்து கொள்வார்.
ரஜினி அவர்களே. தமிழகத்துக்கு ஆன்மீக அரசியல் தேவையில்லை. நீங்கள் இமயமலைக்கே சென்று, அங்கே சாமியார்களோடு உங்கள் ஆன்மீக அரசியலை செய்து கொள்ளுங்கள். பாபாஜியின் மகிமையை இமயமலை சாமியார்களுக்கு புரிய வையுங்கள். எங்களுக்கு வேண்டாம்.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று 1996ல் கூறினார் ரஜினிகாந்த்.
எங்களை ஆண்டவன் காப்பாற்றாவிட்டால் கூட பரவாயில்லை. நீங்கள் வந்து காப்பாற்றும் நிலையில் நிச்சயம் நாங்கள் இல்லை.