விடா முயற்சி விஸ்வரூப வெற்றி, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். இந்த வரிகளுக்குள் இருக்கும் சூட்சுமத்ததை நம்மால் பல தருணங்களில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. காரணம் அன்றாடப் பிரச்சனைகளினால் ஏற்படும் மனக் குழப்பங்களே..! நம்மை சுற்றி இருக்கும் சில ஐந்தறிவு ஜீவ ராசிகளிடம் இருந்தே வெற்றிக்கான பாடங்கள் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதையும் நாம் காணத் தவிர்த்துவிடுகிறோம்.
பொதுவாக குட்டிக் குருவிகள் கூடு கட்டுவதில் இருக்கும் விடா முயற்சியை நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா..? சின்ன சின்னதாக தனது சிறிய அலகால் குச்சிகளை எடுத்துவந்து பார்த்து பார்த்து அழகாக கூடுகட்டும். அந்த கூடு கட்டி முடிக்கும் தருணத்தில் மழையில் நினைந்து சேதமாகி கூடு கீளே விழுந்துவிட்டால் அந்த கூட்டினை எடுத்து வைத்து மீண்டும் தொடர்ந்து கட்டும். அது முடிக்கும் தருணத்தில் காற்றில் அது விழுந்துவிடடால் கூட மீண்டும் அது சளைக்காமல் கூடுகட்ட ஆரம்பிக்கும்.
இந்தப்பணியை அது செய்வதற்கு சளைப்பதும் இல்லை களைப்பதும் இல்லை. தனது கூட்டில் முட்டை இட்டு அடைகாத்து தன் இனத்தை காக்கும் பணியை நன்றாக செய்யும் வரை அதன் முயற்சிப் பணி நிற்பதில்லை. கூடுகள் அழியும் போது அது சோர்ந்து போவதில்லை விடாமுயற்சியும் அடுத்து ஒரு வாய்ப்பு நமது இலக்கை அடைவதற்கான வெற்றியை தரும் எனும் நம்பிக்கையையும் அது இழப்பதில்லை.
ஏதோ ஒருவர் வெறுத்துவிட்டால் நம்மை எல்லோரும் வெறுத்துவிடுவார்களா..? ஏதோ ஒரு தருணத்தில் தோற்றுவிடடால் வாழ்க்கையின் அத்தனை தருணத்திலும் தோற்றுவிடுவோமா என்ன..? எப்போதும் நமது எண்ணங்களை நன்றாக வைத்துக்கொள்வோம். யாரோ ஒருவர் திட்டிவிட்டார் என்று மனம் நொந்து போகாதீர்கள். நீங்கள் கெட்டவராக இருந்தாலும் திட்டுவார்கள் அவர்களை விட சிறப்பானவர்களாக இருந்தாலும் திட்டுவார்கள் இது தான் மனித இயல்பு. எனவே தடைகளை தகர்த்து வானை வசப்படுத்தும் திட சங்கல்பத்தை எடுப்போம்.