மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே. இது சிறு பிள்ளைக்கும் தெரியும். அவர் அந்த மோசடி தொடர்பிலான பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாதென என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரியின் வாள் வெட்டாமல் விட்ட பிரதமர் ரணில் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் சட்டத்தின் பிரதான அங்கங்களில் ஒன்றான குற்றத்துக்கு முன், பின்னரான சூத்திரதாரியின் நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தும் போது பிரதமர் ரணில் தானாக சிக்கிக்கொள்வார். எனவே அவருக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்.
அத்துடன் 2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற மோசடிகளின் போது ஊழியர் சேம இலாப நிதியத்தின் நிதியே பெருமளவு கொள்ளையிடப்ப்ட்டுள்ளதாகவும் இந் நடவடிக்கைகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே இடம்பெற்று வந்துள்ளதாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக் குழு அவதானித்துள்ள நிலையில் அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பிலும் விரிவான விசாரணை ஒன்று புறம்பாக முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி அக்கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித்த ஹேரத்தும் அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகலவும் இதனை வலியுறுத்தினர்.