சீரியஸாக அரசியல் தொடர்பான ட்வீட்களை நடிகர் கமல் பதிவிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ”நீங்கள் எப்போது அரசியல் பிரவேசம் செய்வீர்கள்’’ என்று ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு, ”நான் ஏற்கெனவே அரசியலில்தானே இருக்கிறேன்” என்று பளிச்சென பதில் சொன்னார் கமல்.
ஆனால் ரஜினி , 1996-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது, 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாள்கள் முன்பு கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கருத்துகளைக் கூறியது, 2004-ல் பா.ம.க-வுக்கு எதிராக அரசியல் விமர்சனங்களை முன்வைத்தது என வெளிப்படையாகவே அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும், ‘’காலம் கனியும்போது எனது அரசியல் பிரவேச முடிவை வெளியிடுவேன்’’, “ஆண்டவனுக்குதான் தெரியும்” என்பது போன்று தொடர்ந்து கூறிவந்தார்.
கிட்டத்தட்ட 21 வருடம் கழித்து 2018-ல் அவருக்கு காலம் கனிந்திருக்கும் நிலையில், ‘’நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சந்திப்போம்’’ என்று சூளுரை விடுத்திருக்கிறார்.
தனது இந்தப் பரபரப்பான அரசியல் அறிவிப்பை அடுத்து முக்கிய நபர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினி. அதன் ஒருகட்டமாக நேற்று சென்னைக் கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்.
அவருடனான ரஜினியின் இந்தச் சந்திப்பை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்கவில்லை என்று நேற்று சந்திப்பின்போது உடனிருந்த கழக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்…
”நேற்று காலை நடிகர் ரஜினி வீட்டிலிருந்து போன் செய்து கருணாநிதியைச் சந்திக்க நேரம் கேட்டார்கள். சாதாரணமாகக் கட்சி ஆள்கள் அப்பாயின்மென்ட் கேட்டால் உடனடியாக நேரம் ஒதுக்கித் தந்துவிடும் கருணாநிதியின் உதவியாளர்கள், ரஜினி அப்பாயின்மென்ட் கேட்டதும்… அவர் தற்போது அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சூழலில் நேரம் ஒதுக்கச் சற்றே யோசித்தார்கள்.
பிறகு, ‘நீங்கள் நேரடியாக ஸ்டாலினிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். ஸ்டாலின்…’நேரம் ஒதுக்குவதா… வேண்டாமா’ என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே மீடியா தரப்புக்குச் செய்தி சென்றுவிட்டதால், ரஜினியைத் தவிர்க்கமுடியாமல் மாலைக்கு மேல் கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை வந்து சந்திக்க ரஜினிக்கு கால அவகாசம் ஒதுக்கியிருக்கிறார்.
சரியாக இரவு 8:20 மணிக்கு கோபாலபுரத்துக்கு வருகை தந்திருக்கிறார் ரஜினி. கோபாலபுரம் இல்லத்துக்கு வரும் முக்கிய விருந்தினர்களை வாசல்வரை சென்று வரவேற்கும் ஸ்டாலின், நேற்று ரஜினி வந்தபோது வீட்டுக்குள்ளேயே நின்று வரவேற்றிருக்கிறார்.
ரஜினியை, நேரே மாடியில் இருக்கும் கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அறையில் ஸ்டாலின், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் கருணாநிதியின் உதவியாளர் தவிர வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.
ரஜினி கருணாநிதியைச் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரிக்க, அதற்கு கருணாநிதியின் உதவியாளரிடமிருந்து மட்டுமே பதில் வந்திருக்கிறது. ஸ்டாலின் மௌனமாகவே இருந்திருக்கிறார்.
அடுத்து தயாளு கோபாலபுரத்தில் ரஜினி பின்னணியில் ஸ்டாலின் அம்மாளைப் பார்க்க, ‘அம்மா எங்கே இருக்கிறார்’ என்று ரஜினி கேட்டதும், ‘அம்மா நன்றாக இருக்கிறார்’ என்று கூறி ஸ்டாலின் தயாளு அம்மாளின் அறைக்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்தார்.
இதுமட்டுமே இருவருக்கும் இடையே நிகழ்ந்த அதிகபட்ச உரையாடல். இதையடுத்து ரஜினி அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். ரஜினி கிளம்பியதும் பத்திரிகையாளர்கள் ஸ்டாலினை மொய்க்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினார்.
அதனால் கருணாநிதியின் உதவியாளரை உடனடியாக அழைத்து, ‘மீடியாவுக்கு என்ன சொல்வது?’ என்று கேட்டு, அதன் பிறகுதான், ‘உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கே இந்தச் சந்திப்பு. தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் விருந்தினரை வரவேற்று உபசரித்தோம்’ என்று மீடியாவுக்கு பதிலளித்தார்.
அ.தி.மு.க.விலும் தொடர்ந்து உள்கட்சி சிக்கல் நீடித்துவரும் சூழலில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பெரிதாக யாரும் போட்டியாக இருக்கமாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணியிருந்த நிலையில், தற்போது ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுதான் ஸ்டாலின் முகம்கொடுத்துக் கூட பேசாததற்குக் காரணம்.
‘முரசொலி’ பவளவிழாவில்கூட இதே காரணப் பின்னணியில்தான் ரஜினி மேடையேற மறுத்தார்” என்று கழக வட்டாரங்கள் கூறுகின்றன.
‘பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் பண்படுத்திய திராவிட மண்’ என்று ஒருபுறம் ஸ்டாலின் பேசிவந்தாலும்.. துரைமுருகன், ‘ரஜினியின் அரசியல் வருகையால் தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று கூறி வந்தாலும் 1996-ல் ரஜினியின் அரசியல் கருத்துகளை வரவேற்றதுபோல தற்போதைய கழக வட்டாரங்கள் அவரது அரசியல் அறிவிப்பை வரவேற்கவில்லை என்பதாகவே தெரிகிறது.