“ஜெரூசலம் விற்பனைக்கு இல்லை” – அப்பாஸ் பதிலடி

பலஸ்தீனத்திற்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்திருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், “ஜெரூசலம் விற்பனைக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

download (2)பலஸ்தீனம் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வராவிட்டால் பலஸ்தீனத்திற்கான நிதியுதவிகள் நிறுத்தப்படக்கூடும் என்று டிரம்ப் ட்விட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் அபூ ருதைனா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறியதாவது, “ஜெரூசலம் பலஸ்தீனின் நிரந்தர தலைநகர், அது தங்கம் அல்லது பில்லியன்களுக்கு விற்கப்பட மாட்டாது” என்றார்.

டிரம்ப் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவித்த நிலையில் மத்திய கிழக்கு அமைதி செயற்படுகளில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்ய முடியாது என்று அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

“கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுதந்திர பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அன்றி நாம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்பப்போவதில்லை” என்று ருதைனா குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதவிலேயே நிதி வெட்டு குறித்த எச்சரிகையை டிரம்ப் விடுத்திருந்தார். “பலஸ்தீனர்களுக்கு ஆண்டுதோறும் பல நூறு மில்லியன் டொலர்களை வழங்குகிறோம் அதற்கு பாராட்டு அல்லது மதிப்பு கிடைப்பதில்லை” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“பலஸ்தீனர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் இந்த பெரும் தொகையை எதிர்காலத்தில் நாம் ஏன் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்?” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனத்திற்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த பட்ஜட் குறித்தும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அமெரிக்க அரசின் கணக்குப்படி 2016இல் அது வழங்கிய நிதியுதவி 319 மில்லியன் டொலர்கள் பெறுமதி கொண்டதாகும்.

பலஸ்தீன வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதியுதவிகளை அமெரிக்கா நீண்ட காலமாக வழங்கி வருவதோடு அதற்கு பாதுகாப்பு உதவிகளை செய்து வருகிறது. இது தவிர மேற்குக் கரை மற்றும் காசாவுக்கான ஐ.நா திட்டத்திற்கு 304 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

இதனிடையே, டிரம்பின் எச்சரிக்கை தொடர்பில் பாலஸ்தீன அதிகாரி ஹனான் அஷ்ராவி கூறுகையில், “அமைதிப்பேச்சுவார்த்தையை சீர்க்குலைக்கும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் செயல்பாடுகள் உள்ளன.

இதனால் பலஸ்தீனத்தின் சுதந்திரம், நீதி, அமைதி பாதிக்கப்படுகிறது. பாலஸ்தீனர்கள் மிரட்டலுக்கு ஆளாக மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.