முதலாவது கொங்றீட் மேம்பாலம் இராஜகிரிய சந்தியில்!

கொழும்பு மாவட்டத்தின், இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இரும்பின் மீது கொங்றீட் பரவி நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலம்!

இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபாய்களாகும்.

நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 534 மீற்றர்களாக காணப்படுவதுடன் 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் இது கொண்டுள்ளது. உயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலமானது, இரும்பின் மீது கொங்றீட் பரவி, இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலமாகவும், மிக அலங்காரமான மேம்பாலமாகவும் வரலாற்றில் இடம்பெறுகின்றது.

குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.