விக்னேஸ்வரன் ‘மக்களைக் குழப்பாமல்” இருப்பது அதி முக்கிய தேவையாகும்!! : தமிழ் அரசுக் கட்சி பதிலடி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

Ilankai-Tamil-Arasu-Kadchi (1)இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தேர்தல்கள் வரும் போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை. அவ்விதமான ஒன்றே கடந்த 27ம் திகதியன்று அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.

ஐயா அவர்கள் தான், அரசியல் சாராத ஓர் அரசியல்வாதி என்று சொல்கிறார். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக இவரது பெயரை நான் முன்மொழிந்தேன்.

பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள்’வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்’ என்று எச்சரித்தார். இருப்பினும் அவரையும் சமாதானப்படுத்தி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

கிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களும் வடாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீட்டுச் சின்னத்திற்கு ஆதரவு தேடினோம்.

விக்னேஸ்வரன் ஐயாவை விட அனந்தி அதிக வாக்குகள் பெறும் வாய்ப்புக்கள் இருந்தன. அவ்வாறு நடைபெறுவது விக்னேஸ்வரன் ஐயாவின் கௌரவத்தைப் பாதிக்கும் என உணாந்தோம். இவரே அதிக வாக்குகள் பெற வெண்டும் என்ற வகையில் பிரச்சாரங்கள் செய்தோம். அவ்வகையில் அவர் வெற்றியும் பெற்றார்.

இவரை அரசியலுக்குக் கொண்டுவர முற்பட்ட போது எமது தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘அரசியல் என்பது அடிமட்ட மக்கள் வரை சென்று வேலை செய்யும் ஒரு துறை, விக்னேஸ்வரன் அவர்களைப் போன்ற உயர் அந்தஸ்தைப் பராமரிக்கக்கூடியவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அந்த நிலைமையில் இருந்து இறங்கி வரமாட்டார்கள். இது நமது அரசியலைப் பாதிக்கும்’ என்று குறிப்பிட்டார். அவருடைய வாக்கு இன்று மெய்த்துவிட்டது.

வட மாகாண சபை மத்திய அரசின் எவ்வித தொடர்பும் இன்றி செயற்பட முடியாது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே விக்னேஸ்வரன் ஐயா மத்திய அரசோடு முரண்படவே செய்தார். இதனால் முழு நாடும் வடமாகாண சபையின் செயற்பாட்டின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வினாக்குறியாக வளைத்து விட்டார்.

அதுமட்டுமல்ல எட்டு மாகாண முதலமைச்சர்களும் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள். அதிகம் வலியுறுத்த வேண்டிய வடமாகாண முதல்வர் இக்கூட்டங்களில் கலந்து கொள்ளவும் இல்லை, வலியுறுத்தவும் இல்லை.

இவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற எல்லா தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களுக்கும் ஐயா அவர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய இரண்டொரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டும் இருக்கின்றார்.

ஆனால் அநேகமாக மதிய வேளைக்குள் அவர் விடைபெற்றுச் சென்று விடுவார். இவ்வாறு இருக்க கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, தனது கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பளிக்கவில்லை என்று குறிப்பிடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

வன்முறை சாராத கட்சி என்றவகையில் இயற்கையாகவே இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன்தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன என்று அவர் கூறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் தனக்குத் தரப்பட்டதாகவும், அதிலிருந்த கொள்கைகள் சரியெனப் பட்டதாகவும் கூறுகின்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் (1977களில் வெளியிடப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தவிர்ந்த) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதே அல்லது இதனைத் தழுவிய விடயங்களே இடம்பெற்றிருக்கின்றன.

ஐயா அவர்கள் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை அறிக்கைகளில் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினை மையப்படுத்திய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் மக்களை அணிதிரளும் படி பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.இக்கட்சியின் கொள்கையின்பால் இருந்த பிடிமானமே இதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

இந்தக் கொள்கைக் கோட்பாடுகளின்றும் தமிழ் அரசுக் கட்சி எவ்விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஒரு கொள்கையின் பொருள் கோடல் என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இலக்கணப் பொருள்கோடலாக இருக்க முடியாது என்பது ஐயாவிற்குத் தெரியாததொன்றல்ல.

அந்த வகையிலே நடப்பியல் தழுவிய செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எவ்விதத்திலும் விலகிச் செல்லவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்ட போது அக்கட்சி பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி அல்ல என்பது தனக்குத் தெரியாது என்று கூறுகின்றார்.

கூட்டமைப்பு பதியப்பட்டிருந்தால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று ஐயா ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.

2014ல் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐயா அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டார்.

அவர் வருகின்றார் என்பதற்காக சுமந்திரன் அவர்களே வண்டியின் சாரதியாக இருந்து வண்டியைச் செலுத்தி வந்தார். நான் இவர்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

கொழும்பில் இருந்து வவுனியா செல்லும் வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உரையாடலில், ‘இன அழிப்புப் பிரேரணை’ முக்கிய இடம் பிடித்திருந்தது.

இன அழிப்பு என்பது அதிகூடிய நிறுவு தரத்தின் மேல் நிறுவப்பட வேண்டியதொன்று, அதிகபட்ச அளவிலான சான்றுகள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து நிராகரிக்கப்படலாம்.

தென்சூடானின் முன்னுதாரணத்தை நாமும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் போர்க்குற்றம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் நின்று சிறந்த சான்றுகளை முன்வைக்கும் போது சான்றுகளினுடைய பெறுமானத்தைக் கருத்திற் கொண்டு இன அழிப்பு நடைபெற்றது என்ற தீர்ப்பைப் பெறும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். என்ற விடயத்தை ஆசிரியரும், மாணவனும் கருத்தொருமித்துக் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கூட குறித்த பிரேரணை வடமாகாணசபையில் முன்வைக்கப்படவில்லை.

ஆனால் 2015ல், ஆட்சி மாற்றத்தின் பின் இன அழிப்புப் பிரேரணை வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. அதுவும் ஆரம்பத்தில் அதனை முன்மொழிய முனைந்த சிவாஜிலிங்கம் அவர்கள் முன்மொழியாது விக்னேஸ்வரன் ஐயா அவர்களே முன்மொழிந்தமையானது ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்திதானே? அவ்வாறு ஒரு அவசியம் இருந்திருந்தால் கூட அது ஏன் தலைமைக்குத் தெரிவித்திருக்கப்படக் கூடாது.

அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று, அந்த அரசியற் கட்சியின் உழைப்பினால் அதிகூடிய வாக்குகளைப் பெற்று, முதலமைச்சராகிய ஐயா அவர்கள் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் சார்பு நிலை கொண்டிருந்த நிலைமையையெல்லாம் திடுதிப்பென ஏன் மாற்றிக் கொண்டார்.

இப்போது ‘என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்தோடு ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்துள்ளார்கள்’ என்று குறிப்பிடுகின்றார். இத்தனை மாற்றத்திற்கும் காரணம் 2014ம் ஆண்டு இறுதிப் பகுதியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகாநாடே ஆகும்.

கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராஜா அண்ணன் அவர்களுக்கு சென்றடைந்தமைதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்பு கனவாயிற்றே என்பதைச் சகித்துக் கொள்வது கடினம் தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல.

ஐயா அவர்கள் அரசியலுக்கு வருமுன் குறிப்பிட்டார்  ‘நீங்கள் எல்லாம் நிர்ப்பந்திப்பதால் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக நிற்கின்றேன், அதேவேளை இரண்டரை வருடங்கள் மாத்திரமே பதவியிலிருப்பேன்’ என்று பெருமனதோடு குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகாநாட்டின் பின்னர் வேறொரு விஸ்வரூபம் எடுத்து விட்டார்.

இவர் எமக்கு மிகவும் வேண்டியவர். இவரது மனநிலை மாற்றம் தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமோ என்று கூட கவலையடைகின்றோம். ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரத்தில் ஏற்பட்ட இந்தத் துர்ப்பாக்கியத்தை நினைத்து ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்’ என்று பாரதி கேட்டது போல கேட்கத் தோன்றுகிறது.

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார்.

2017.10.21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அதனை நிராகரிப்பதாகச் சொன்னார். பின்னர் தான் அதை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சொன்னார். அவர் குழம்பாமல் இருப்பதும், மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்.

அரசியலமைப்பு என்பது இன்றைய நிலையிலே புரிந்துணர்வோடு, இணக்கப்பாட்டோடு உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. இவை இரண்டும் இல்லையென்றால் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு தீர்வு அடையப்பட மாட்டாது.

சமஷ்டி என்பது நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபட்ட பொருள் கோடலைக் கொண்டதாக வழங்கிவருகின்ற, வளர்ந்து வருகின்ற ஒரு கோட்பாடு.

பிரித்தானிய ஒற்றையாட்சி கூட வடஅயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற பிராந்தியங்கள் பிரிந்து செல்லக்கூடிய தத்துவங்களைக் கொண்டிருக்கின்ற அளவிற்கு தற்போது மாற்றமடைந்துள்ளது. எனவே அரசியல் தீர்வில் சமஷ்டி, சுயநிர்ணயம் என்பன எழுதப்படுவதற்கு மேல் செயற்படுத்தப்படுவதிலேயே அதிகம் தங்கியுள்ளன.

இடைக்கால அறிக்கையை ஆறு உபகுழுக்களின் அறிக்கை, இடைக்கால அறிக்கை, பின் இணைப்புக்கள் எனும் எல்லாவற்றையும் ஒருசேரப் படித்தே பொருள்கோடல் செய்ய வேண்டும். இப்போது இருக்கின்ற வாய்ப்பை எல்லோரும் சேர்ந்து பயன்படுத்த வேண்டும்.

எதுஎது இல்லை என்று கருதுகின்றோமோ, அவ்வவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் என்ன உத்திகள் கையாளப்பட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும்.

நமது தனிப்பட்ட கௌரவங்கள், பிடிவாதங்கள் என்பன தமிழ் மக்களின் தலைவிதியாக மாற்றிவிடக் கூடாது. அடுத்த தரப்பினரை அகௌரவப்படுத்திக் கொண்டு புரிந்துணர்வோடு கூடிய நல்லிணக்கத்தை எய்த முடியுமா?

ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மக்கள் இங்கு இருக்கவில்லை என்பது புரிந்துணர்வை வளர்ப்பதற்கு உரமாகுமா? விசமாகுமா? அப்படியென்றால் 16ம் நூற்றாண்டுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் இலங்கையில் இருக்கவில்லையே என்பதும் ஒரு வாதமாகி அது அம்மக்களைப் புண்படுத்தாதா?

எங்களுடைய தலைவர்களின் பிடிவாதம் காரணமாக எத்தனை விடயங்களை இழந்திருக்கின்றோம். 1826களில் கண்டிய குழுமத்தினர் சமஷ்டியைக் கேட்டபோது எம்முடைய தலைவர்கள் தங்கள் வித்துவம் காரணமாக அதனை ஏற்கவில்லை. டொனமூர் திட்டத்தை எதிர்த்து அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்தார்கள்.

எனினும் நான்கு ஆண்டுகளின் பின் அச் சபைக்குச் சென்றார்கள். சோல்பரி ஆணைக்குழுவின் முன் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டு ஐம்பத்தைந்திற்கு நாற்பத்தைந்து முன்வைக்கப்பட்ட போது அதனையும் ஏற்க மறுத்தார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தம் வந்தபோது ஐயா ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் செல்வநாயகம் தமிழ் மக்களை விற்றுவிட்டார் என்று பரப்புரை செய்தார்.

டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் போதும் இதுவே நடைபெற்றது. 1987ல் வடகிழக்கிற்கான இடைக்கால நிர்வாகசபை அறிவிக்கப்பட்ட போது நாம் கொடுத்த மூன்று பெயர்களைப் பெற்ற ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் அதில் ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்த போது அதனை சாதுரியமாக நகர்த்தாமல் அந்த வாய்ப்பையே போட்டுடைத்தோம்.

13வது திருத்தத்தின் பின்னர் வடகிழக்கு இணைப்பு என்பது நிபந்தனையோடு கூடியதாக இருந்தது. சரியோ பிழையோ தேர்தல் நடைபெற்று வடகிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதே! அதே போன்று ஒரு தேர்தல் மூலம் வடகிழக்கை இணைத்திருக்க முடியாதா? அந்த வாய்ப்பையும் நழுவ விட்டோம்.

1999ல் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வகையிலான நீலன் – பீரிஸ் தீர்வுத் திட்டம் அரசியலமைப்புச் சட்டமாக வந்தது.

பின்னொரு நாளில் அன்டன் பாலசிங்கம் அவர்களே இது வரவேற்கத்தக்க தீர்வுப் பொறிமுறை என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கூட நழுவவிட்டோம். இவ்வாறு வெண்ணெய் திரண்டுவரும் போதெல்லாம் தாழியை உடைத்த வெற்றி வீரர்களின் வாரிசுகள் நாம்.

இது ஒரு நாடு, இந்த நாட்டுக்குள்ளே தான் நமக்கான தீர்வு. தீர்வின் அடிப்படை புரிந்துணர்வுடனான, விட்டுக் கொடுப்பும், நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கமும் ஆகும். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் முன்மொழிவு உண்டு. இது இடைக்கால அறிக்கை மட்டும் தான் இறுதி வடிவம் இன்னும் வரவில்லை.

தோசை சுடுபவளுக்கு எப்போது அதைப் புரட்டிப் போட வேண்டும் என்று தெரிய வேண்டும், என்று தொண்டமான் அவர்கள் ஒரு முறை கூறியிருக்கின்றார். சமையற்கலைப் புத்தகத்தைப் படித்துவிட்டு மட்டும் வந்து தோசை சுட முடியாது. அது போலத்தான் அரசியற் கலையை நூல்களை வாசித்துவிட்டு மட்டும் கையாள முடியாது.

மக்கள் விக்னேஸ்வரன் ஐயாவை முதலமைச்சராக்கியது தீர்வுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அதில் சேர்ந்துள்ள ஒவ்வாரு கட்சியினதும் செயற்பாட்டோடு சேர்ந்து பலம் சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நடப்பியல் அறிந்து அதை நகர்த்த வேண்டும். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது’. கம்பவாருதி அவர்கள் ஐயா விக்னேஸ்வரன் பற்றி பல பக்கக் கட்டுரை வரைந்திருக்கின்றார்.

அவற்றைப் படித்தோம், ஆனால் பெரிது படுத்தவில்லை. அவற்றின் இலக்கணமாக அவர் இருந்து விடக் கூடாது என்று இன்றும் நாங்கள் விரும்புகின்றோம்.

அண்மையில் கனகீஸ்வரன் அவர்களின் முன்னிலையில் மூன்று மணித்தியாலங்கள் ஐயா விக்னேஸ்வரன், ஐயா சம்பந்தன் அவர்களுடன் மனம் திறந்து கலந்துரையாடினார்.

அதற்குப் பின் 84 வயதிலும் சம்பந்தன் அவர்கள் எல்லா விடயங்களையும் அறிந்து வைத்துள்ளார் என்று அவரே குறிப்பிட்டும் இருக்கின்றார். மாற்றுத் தலைமை தேவையில்லை என்றும் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் இவ்வாறான அறிக்கை ஏன்?

தமிழரசுக் கட்சி கொள்கை வழியே தான் செல்கின்றது. நடப்பியல் தழுவி நடந்து கொள்கின்றது. இதனை மக்களுக்கு விளக்கியுள்ளோம். மக்களும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தூங்குவது போல் பாசாங்கு செய்வோரை என்ன செய்வது?

சிங்கள மக்களுக்கு சமஷ்டி பற்றி விளக்குவதில் சுமந்திரன் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். சோபித தேரரின் அணியினால் அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து அவர் சமஷ்டி பற்றிக் கூறிய விடயம் அமோக வரவேற்புப் பெற்றது. இச் செயற்பாடு தொடர்கின்றது.

எலும்புத் துண்டு பற்றியெல்லாம் ஐயா பேசுகின்றார். இது இரண்டாம், மூன்றாம் தரப் பேனாக்களின் வாசகங்கள். இதை நீங்களும் சொல்லுவது ‘நிலத்திற் கிடந்ததை கால் காட்டும்’ என்ற குறளை நினைக்கச் செய்கின்றது. இது உங்கள் தராதரத்திற்குரிய பாவனை அல்ல.

துயரோடு இருக்கின்ற எல்லாத் தமிழர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றேன் தமிழ் மக்களின் நம்பிக்கை வீணாகக்கூடாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.