இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பெண்கள் தமிழர் பாரம்பரிய முறையில் வேட்டி சேலை அணிந்து பொங்கல் கொண்டாடினர்.
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் கடந்த 28 ஆம் தேதி சென்னை வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு குழுக்களாக அவர்களில் ஆட்டோக்களில் பயணம் மேற்கொண்டனர்.
சென்னையை தொடர்ந்து புதுச்சேரி சென்ற அவர்கள் தொடர்ச்சியாக தஞ்சாவூர், மதுரை வழியாக இன்று தூத்துக்குடிக்கு சென்னறனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு சென்ற அவர்கள் அங்கிருந்து தூத்துக்குடி சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்துக்கு தங்களது ஆட்டோக்கள் மூலம் சென்றடைந்தனர்.
இவர்களுக்கு தமிழர் பாரம்பரியப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வேட்டி சேலை அணிந்து வந்த வெளிநாட்டை சேர்ந்த குழுக்களுக்கு தனித்தனியாக பொங்கல் பானைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக அவர்கள் பொங்கல் வைத்தனர். தாங்கள் செய்த பொங்கலை பூக்களால் அலங்கரித்துப் பார்வைக்கு வைத்தனர்.
சுவையான பொங்கல் செய்த வெளிநாட்டு குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.