இந்தியாவில் தனித்துவமான சில பாதுகாவலர்கள் இருக்கின்றார்கள். கம்பீரமான கருப்பு உடையில் கைகளில் எப்பொழுதும் P90 ரக துப்பாக்கியோடு வலம் வருவார்கள். அவர்கள்தான் சிறப்பு பாதுகாப்பு குழு( Special Protection Group).
இவர்கள்தான் இந்தியாவின் பிரதமரையும், முன்னாள் பிரதமரையும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில், சிறப்பு பாதுகாப்பு குழுவினருக்கு அதிகமான சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதாவது அவர்களது ஆடைகளுக்காக வழங்கப்படும் தொகை 27,800 ரூபாய். ஆனால், கம்பீரமாக வலம் வந்தாலும் இவர்களது வேலை மிகவும் கடினமானது.
பிரதமர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டால், சிறப்பு பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவர், முதலில் விமானத்தை விட்டு இறங்கி, பாதுகாப்பான சூழல் இருக்கிறதா என சோதனை செய்வார். அதன் பின்னரே, பிரதமர் விமானத்தை விட்டு கீழிறங்குவார்.
இவர்களின் இந்த சிறப்பான வேலைகளினால், இந்தியாவின் 007 என்று கருதப்படுகிறார்கள். இவர்கள், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை, இந்திய-திபத்திய எல்லை போலீஸ் மற்றும் பலவற்றிலிருந்து மிக கடுமையான தேர்வு முறைகளுக்கு பின்னரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது, அமெரிக்க ரகசிய சேவை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அளவிற்கு, மிகவும் கடுமையான பயிற்சி வழங்கப்படுகிறது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு கட்ட பயிற்சிகள் இதில் அடங்கும்.
சிறப்பு பாதுகாப்பு குழுவினர், விவிஐபிக்களை பாதுகாக்கும் வல்லமை மிக்க பணியில் ஈடுபட்டுள்ளனர். பலமான, கூர்மையான மற்றும் மிரட்டுவதற்கான தோரணையில் இருக்கும் இவர்கள், தற்பொழுதுள்ள பயங்கரவாத சூழ்நிலையையும், தேசிய பாதுகாப்பு அச்சுருத்தல்களையும் தாண்டி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.