வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மீதும் குறித்த பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…..
நேற்று பிற்பகல் 4 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்குள் இ.போ.ச வினரின் வெளிமாவட்ட பேருந்து உள்நுழையப்பட்டதை அடுத்து இ.போ.ச வினருக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார். இதனால் பாதிப்படைந்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடம் தன்னை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து இ.போ.ச வினர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமது பேருந்துக்களை எடுத்துகொண்டு சாலைக்கு திரும்பியுள்ளனர்.
நேற்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வெளி மாவட்ட பேருந்துக்கள் புதிய பேருந்து நிலையத்திற்குள் உட்செல்வது தடைசெய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் ஊடகவியலாளர்கள் செய்தி தொடர்பாக கலந்துரையாடிக்கொண்ட வேளை குறித்த பொலிஸ் அதிகாரி குறுக்கே வந்து ஊடகவியலாளர்களை அங்கிருந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தியதுடன் தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளாா்.
அத்துடன் மார்பில் கைவைத்து அச்சுறுத்தல் விடுத்துமுள்ளார். இது சம்பந்தமாக பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஊடகவியலாளர்கள் முறையிட்டதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பினரையும் சுமூக நிலைமைக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.