குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பக்கச் சார்பாக நடந்துகொள்வதுடன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைத்து நாட்டை பாதுகாத்த படை வீரர்களை சிறைவைத்திருப்பதாக குற்றம்சாட்டி நேற்றையதினம் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் 11 பேரை வெள்ளை வானில் கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய நிலையில் காணாமல் போகச் செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியுமான கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்கவின் புதல்வி உட்பட சிலரே இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடந்த 2008 2009 ஆம் ஆண்டுகளில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் 11 பேர் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்திய நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு தொடர்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்திவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரும், கடற்படையின் உளவுப் பிரிவின் தலைமை அதிகாரியுமான கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் ஆறு பேரை கைதுசெய்தனர்.
இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுக்கு அமைய குறித்த ஆறு பேரும் நீதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா கடற்படை உளவுப் பிரிவில் பணியாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியான பீ.எம்.விஜயகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய சாட்சியத்தை அடுத்தே ஸ்ரீலங்கா கடற்படை உளவுப் பிரிவின் தலைமை அதிகாரியான கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க உட்பட கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் ஆறு பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மிக முக்கிய பணியாற்றிய தமது தந்தை உள்ளிட்ட படை வீரர்களை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டு சாட்சியங்களை சோடித்து பழிவாங்கி வருவதாக ஸ்ரீலங்கா கடற்படை உளவுப் பிரிவின் தலைமை அதிகாரியான கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்கவின் புதல்வி உட்பட உளவுப் பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினர் நேற்று பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டை மீட்ட படையினருக்கு எதிராக முன்னெடுத்துள்ள பழி வாங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்ய முற்பட்ட போதிலும் அதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா கடற்படை உளவுப் பிரிவின் தலைமை அதிகாரி தஸநாயக்கவின் புதல்விஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
இதனையடுத்தே நேற்றைய தினம் தாங்கள் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்த அவர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தனது தந்தை உட்பட உளவுத்துறை அதிகாரிகளுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
எவ்வாறாயினும் கடந்த 2 ஆம் திகதி கொழும்புக் கோட்டை நீதவான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையின் உளவுப் பிரிவில் பணியாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியான பீ.எம்.விஜயகாந்தன், கொழும்புக் கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியிருந்தார்.
இதற்கு முன்னர் அரச சாட்சியாக மாறியிருந்த விஜயகாந்தன், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியிருந்த சாட்சியப் பதிவில், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான லெப்டினன் கொமாண்டர் சுமித் ரணசிங்க என்ற அதிகாரியினால் திருகோணமலை கடற்படைத் தளத்திலுள்ள பாதாள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.
கடற்படை அதிகாரி ரணசிங்க ஏராளமானோரை தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்ததை தான் கண்ணால் கண்டதாகவும் அவர்களுடன் தான் கதைத்திருப்பதாகவும், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு சடலங்களை கொங்ரீட் தூண்களில் கட்டி படகுகளில் கொண்டுசென்று ஆழ் கடலில் போட்டதாகவும் பொடி மல்லி என கடற்படை உளவுப் பிரிவினரால் அழைக்கப்படும் தன்விஜயகாந்தன் தனது சாட்சியில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விஜயகாந்தனுக்கு தெரியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட சாட்சிக் கடிதத்திலேயே கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியான கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் ஆறு பேரை சிறையில் வைத்திருப்பதாக அவர்கள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அவர்களது குடும்பத்தினரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.