யுத்தம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட போராளிகள் உட்பட அப்பாவி மக்களுக்கும் அதேபோல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொடூரங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பொறுப்புக்கூற வேண்டும் என பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிறையிலுள்ள பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு பட்டிருப்பு பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசக் கிளைக் காரியாலயம் ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை பட்டிருப்பில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் காரியாலயத்தை திறந்து வைத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் கடமையை அந்தக் கட்சி நிறைவேற்றத் தவறியதாலேயே தமிழ் மக்கள் பாரிய அழிவை சந்திக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.