கிளிநொச்சி – பூநகரி செல்லையாதீவு சந்தியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளில் சந்தேக நபரை காப்பாற்றும் வகையில் பொலிஸாரின் நடத்தை இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி செல்லையாதீவு சந்தியில் நேற்று மாலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான (வயது 32) சிங்கராசா கேதீஸ்வரன் என்பவர் பலியாகியிருந்தார்.
இவ் விபத்து வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மோதுடதனாலையே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கு சாட்சியாக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்து விசாரணைகள் இன்று மதியம் வரை இடம்பெற்றன.
இந்த நிலையில் சட்ட வைத்திய அதிகாரியினதும் மரணவிசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் இறந்த நபர் தலையில் ஏற்ப்பட்ட காயம்காரனமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒரு நபர் மதியத்திற்கு பின்னர் பொலிஸாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக குறித்த விபத்து பார ஊர்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர்.
பார ஊர்தியையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த நபர் தெரிவிக்கையில், குறித்த விபத்தை தான் பார்க்கும் போது பார ஊர்தியில் அடிப்பட்டதற்கான தடயங்களும் காயங்களும் இருந்ததாகவும் இதனை தான் பொலிஸாருக்கு தெரிவித்திருந்ததாகவும் உடனே தானது வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது இடையில் வருகைதந்த நோயாளர் காவுவண்டிக்கு மாற்றிவிட்டு அவரது உடைமைகள் இருப்பதனை தெரிவித்து விட்டு சென்றதாக தெரிவித்தார்.
இவ் விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வெளியிட்ட குடும்பத்தார் பொலிஸார் உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாகவும் தெரிவித்து பொலிஸாருடன் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி மற்றும் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.