சிறப்பு பரிகாரம் ஒன்று செய்வதற்காக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் நீராடி பூஜையில் ஈடுபட்டுள்ளார்.
நாளை மறுநாள் தமிழக சட்டமன்றம் கவர்னர் உரையுடன் துவங்க உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற முன்னவராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக செங்கேட்டையனிடம் அந்த பதவி இருந்தது, அவரிடம் பறித்து பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் போராட்டம், ஒரு புறம் தினகரனின் இணை அரசியல் என்று இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் இங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இன்று அதிகாலையிலேயே கண் விழித்து அக்னி தீர்த்தத்திற்கு சென்ற அவர் புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்த மண்டபத்தில் நடந்த சிறப்பு பரிகார பூஜையில் கலந்து கொண்டார்.
பூஜையினை தொடர்ந்து தனுஷ்கோடி சென்று புனித நீராடி பூஜையினை நிறைவு செய்கிறார்.
மாலை 4 மணிக்கு தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்லும் பன்னீர்செல்வம் சுவாமி அம்பாள் தரிசனம் செய்து வழிபடுகிறார்.
இக்கட்டான சூழ்நிலையில் பரிகார பூஜை நடத்தியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.