யாழில் அரசியல் கட்சிகளால் சில குடும்பங்கள் விவாகரத்துவரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் வலிகாமம் பகுதியில் மனைவி மீது கணவன் தாக்குதல் நடாத்தியதில் மனைவியின் கை அடித்து முறிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து மனைவியின் தந்தையும் தந்தையின் நண்பனுமாகச் சேர்ந்து கணவனைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.யாழ். வலிகாமம் பகுதியில் முதியோர் சங்கத்தில் அங்கத்தவராக உள்ளவரே மருமகனின் கோபத்துக்கு உள்ளானவராவார். குறித்த முதியோர் சங்கத்தை தனது கைக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாணத்தில் உள்ள தேசியக்கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் அந்த சங்கத்தின் ஊடாக தேர்தல் பரப்புரைகளை செய்ய முற்பட்டுள்ளார்.யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் குறித்த முதியவரின் மகளின் கணவன் தனது மாமனார் அந்தக் கட்சிக்கு தேர்தல் பரப்புரைகள் செய்வதை நிறுத்துமாறு எச்சரிக்கை செய்துள்ளார். இருந்தும் மருமகனின் எச்சரிக்கையையும் மீறி மாமனார் அக் கட்சிக்காக தனது நண்பர்களுடன் களத்தில் குதித்ததாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மாமனாருடன் வாக்குவாதத்தில் மருமகன் ஈடுபட்டுள்ளார். இருவரும் கைகலப்புக்கு செல்வதற்கு ஆயத்தமாகிய போது இடையில் வந்து தந்தையையும் கணவனையும் தடுக்க முற்பட்டுள்ளார் மனைவி. இதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளில் மனைவியின் கைப் பகுதிக்கு கதவு தடைப் பலகையால் தாக்கியதில் மனைவியின் கை முறிந்துள்ளது.இதனையடுத்து, மகளுக்கு ஏற்பட்ட காயத்துக்கு பழி வாங்கும் முகமாக தந்தையால் வரவழைக்கப்பட்ட அவருடைய வயதைச் சேர்ந்தவர்கள் மருமகனை நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.மனைவியும், கணவனும் ஒரே வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. மருமகன் தமிழ்த் தேசியத்தியத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் ஒரு கட்சியின் விசுவாசி எனவும் தெரியவருகின்றது.