வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கெடட் எனும் இராணுவ பயிற்சி வெற்றியளித்துள்ளதாக இராணுவத்தினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.முதற்கட்டமாக வட மாகாணத்தில் இரு பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தகவலை இராணுவப் பிரிவு வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் வட மாகாண பாடசாலைகளுக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கு வட மாகாண சபை எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது அதற்கான அனுமதியை வடமாகாண கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இராணுவ பயிற்சிக்காக யாழ். மத்திய கல்லூரி, மற்றும் கிளிநொச்சி உருத்திபுரம் மத்திய மகா வித்தியாலயம் ,ஆகிய பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இராணுவத்தினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் கெடட் இராணுவ பயிற்சி நடவடிக்கையை வட மாகாணத்தில் முன்னெடுக்க விடுதலைப் புலிகள் தடை விதித்திருந்தனர்.கெடட் அதிகாரிகளாக பயிற்சி பெற்றிருந்த வட மாகாண ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவதில் இருந்து விலகியிருக்க வேண்டுமென விடுதலைப் புலிகளால் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் வட மாகாணத்தில் மூன்று பாடசாலைகளில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.