முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 78 முதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கூடுதலானோர் ஆண்கள் என இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆண் முதியவர்கள் 44பேரும் பெண் முதியவர்கள் 34பேரும் கடந்த ஆண்டில் இல்லத்தில் இணைக்கப் பட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சேர்க்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது கடந்த ஆண்டில்தான் அதிகளவான முதியவர்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
குறிப்பாக 2012ஆம் ஆண்டில் 24 ஆண் முதியவர்கள் 19 பெண் முதியவர்கள் என 44 பேரும், 2013ஆம் ஆண்டில் 24 ஆண் முதியவர்கள் 19 பெண் முதியவர்கள் என 44பேரும் 2014ஆம் ஆண்டில் 32 ஆண் முதியவர்கள் 16 பெண் முதியவர்கள் என 48பேரும் 2015ஆம் ஆண்டில் 18 ஆண் முதியவர்கள் 23 பெண் முதியவர்கள் என 41பேரும் 2016ஆம் ஆண்டில் 37ஆண் முதியவர்கள் 17பெண் முதிய வர்கள் என 54பேரும் சேர்க்கப்பட்டனர்.
தற்போது இல்லத்தில் கிட்டத்தட்ட 220 முதியவர்கள் தங்கியுள்ளனர். இதில் 123 ஆண் முதியவர்களும் 97 பெண் முதியவர்களும் உள்ளனர். முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு வருவதால் இல்லத்தில் இட நெருக்கடி ஏற்படும் நிலை தோன்றியுள்ளது–என்றார்.
வடக்கில் ஒரே ஒரு அரச முதியோர் இல்லமாக கைதடி முதியோர் இல்லம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.