நுவரெலியாவின் வெப்ப நிலை அதிகமான அளவுக்கு குறைந்துள்ளதாக் ஆங்காங்கே பனிப்படர்வு காணப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் வானிலைத் தகவலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் பொதுவாக வறட்சியான காலநிலையே காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு மற்றும் காலை வேளைகளில் நாட்டில் பெரும்பாலான பிதேசங்களில் குளிரான காலநிலையே காணப்படும் என்றும் மேல் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்த மேற்படி திணைக்களம், வடக்கு கிழக்கில் தற்பொழுது குளிருடனான காலநிலை காணப்படுகின்றது என்றும் இதற்கு காரணம் வளிமண்டளத்தில் காணப்படும் ஈரப்பதனே ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு இந்த காலநிலை பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் இந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பனிப் பொழிவு காணப்படுவது வழக்கம் என்றும், இதன் காரணமாக எதிர் வரும் 12 ஆம் திகதி முதல் சுமார் ஒரு வார காலத்திற்கு குறைந்த அளவான மழைவீழ்ச்சியையே எதிர்பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் மழையின் பின்னரும் பனியுடனான காலநிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இன்று அதிகாலையும் நுவரெலியாவின் உள்ள குதிரை மைதானம் பனியினால் படர்ந்து காணப்பட்டது. நுவரெலியாவின் வெப்ப நிலை நான்கு செல்ஸியஸாக காணப்பட்டதோடு மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறு தரையில் பனி படர்ந்திருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.