சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிலிங்கம் சற்குணதேவன் என்ற வேட்பாளரே காயமடைந்தவராவார்.
சாவகச்சேரி நகரசபையின் 8 ஆவது வட்டாரத்துக்கு (நுணாவில் கிழக்கு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர் போட்டியிடுகிறார்.
இவர் சாவகச்சேரி- சிவன்கோவிலடிப் பகுதியில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் வாக்கு சேகரிப்பதற்காக வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தார். வீடு ஒன்றுக்குள் பரப்புரைக்காகச் சென்ற போது, வேட்பாளர் காசிலிங்கம் சற்குணதேவன் மீது அங்கிருந்தவர் தாக்குதல் நடத்தினார்.
இதில் படுகாயமடைந்த வேட்பாளர் உடனடியாக சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாக்கப்பட்ட வேட்பாளர் காசிலிங்கம் சற்குணதேவன், கடந்த முறையும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.