யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2017ஆம் ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் 5,746 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 12 வீதம் அதிகமாகும்.
அதேவேளை, 2017ஆம் ஆண்டில் சிசு மரண வீதமும் குறைவடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவ வசதிகள் அதிகரிப்பு, கடந்த சில ஆண்டுகளில் மருத்துவமனைப் பணியாளர்களின் சேவையின் தரத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் என்பனவற்றினால், சிசு மரணவீதம் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 1700 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு நாளாந்தம், 900 தொடக்கம் 1600 வரையான நோயாளர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.