சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை போலவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தமிழக முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழில் பேசி தனது உரை ஆரம்பித்ததுமே, எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளின் இத்தகைய கோஷங்களுக்கு நடுவேயும், ஆளுநர் தன்னுடைய உரையை தொடர்ந்தார். இதனையடுத்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர் அவை அமைதியானதும் ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும், முந்தைய சாதனைகளையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இவர்களுக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் வாய்ப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.