வட கொரியா கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வழக்கம்போல் அமெரிக்காவின் கண்டனத்தை சந்தித்தது. ஆனால், அந்த நாடு, அதன் தலைவரை குறிப்பாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன?
இந்த எஞ்சின் சோதனை வெற்றி என்றும், வட கொரியாவின் ராக்கெட் துறைக்கு “புது பிறப்பு” (புது வரவு) என்றும் கூறப்படுகிறது. கிம்-ஜோங் உன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் KCNA வெளியிட்ட புகைப்படங்களில், தொலைவில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கிம்-ஜோங் உன் புன்னகையுடன் ஏவுகணையை பார்வையிடுகிறார்.
களிப்புடன் இருக்கும் அதிகாரிகளுடன் கைகுலுக்கும் அதிபரின் முதுகில் ஒரு ஒரு மூத்த அதிகாரி தாவி ஏறுகிறார்.
யார் இவர்? ஒரு சர்வாதிகாரி மீது ஏன் தாவி ஏறுகிறார்?
இந்த புதிரான மனிதர் வடகொரிய அரசியலில் பரிச்சியமானவர் இல்லை. இந்த எஞ்சின் பரிசோதனையில் முக்கிய பங்காற்றியவர் என்றும், அதிபர் கிம்முடன் நன்றாக பேசக்கூடியவர் என்றும் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
“அந்த நபர் கே.பி.ஏவின் முக்கியமான அதிகாரி என்பதும், எதிர்தாக்குதல் நட்த்தும் ஏவுகணை படைகளின் பொறுப்பாளர் என்பதும் அவர் அணிந்திருக்கும் சீருடைகளில் இருந்து தெரிகிறது” என்கிறார் வடகொரிய விவகாரங்களை கூர்ந்து கவனிக்கும் மைக்கேல் மேடன்.
இந்த புகைப்படம் அனேகமாக ஒரு மேடையில் எடுக்கப்பட்டதாக இருக்கும், “இது திருத்தப்பட்ட அல்லது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்று கூறுகிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் அமெரிக்க-கொரியா நிறுவனத்தை சேர்ந்த மேடன்.
“இது ஜோடிக்கபட்ட புகைப்படமா என்பதை விட, ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுத்துவது” என்று சொல்லப்படுகிறது வட கொரியாவின் பிரசாரப் படங்களில் மக்கள் கிம்-ஐ அணுக முடிவதாக காட்டப்பட்டிருந்ததும் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
“நட்பு மற்றும் மகிழ்ச்சி”
அதிபர் கிம் மகிழ்ச்சியானவர் இயல்பானவர் என்ற எண்ணத்தை பொது மக்களிடையே ஏற்படுத்துவது தான் இந்தப் புகைப்படத்தின் முக்கிய நோக்கம்.
“அடங்காதவர் மற்றும் சமரசம் செய்துக்கொள்ளாதவர்” என்ற தோற்றத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்த முயற்சிக்கும் கிம், உள்நாட்டில் மாறுபட்டு காட்டிக்கொள்ள விரும்புகிறார்” சியோலில் இருக்கும் கொரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர ஜா-சியோன் லிம் கூறுகிறார்.
“தனது ஆணைகளை ஏற்காத உயர் பிரமுகர்களிடம் கூட அவர் மிகவும் கண்டிப்பாக நடந்துக் கொள்பவர் என்பது தெரியும். ஆனால், மக்களிடம் அன்பாகவும், இயல்பாகவும் இருப்பதாக அவர் வெளிக்காட்டிக் கொள்ள விரும்புகிறார்”.
“தனிப்பட்ட முறையில், தனது தந்தையை விட வெளிப்படையானவர் என்பதை வெளிப்படுத்த கிம் முயற்சிப்பது தெரிகிறது”
“நாட்டில் அவரது தலைமையும், நிர்வாகமும் சிறப்பாக இருப்பதாக அரசியல்ரீதியிலான நம்பிக்கையை இந்த புகைப்படம் ஏற்படுத்துகிறது.
அவர் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், இந்த புகைப்படங்களை வெளியில் உலாவவிட்டிருக்கமாட்டார். அவர் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பதாக தோற்றமளிக்க விரும்புகிறார்”.
அதிபர் கிம் ஆரோக்கியமாக இருப்பதையும் இந்த புகைப்படம் காட்டுகிறது.
கிம் நடப்பதற்கு சிரமப்பட்டதும், 2014 ஆம் ஆண்டில் கைத்தடி உதவியுடன் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவருக்கு கீல்வாதம் இருப்பதாக ஊகங்கள் நிலவின. 2016 ஆம் ஆண்டும் கூட அவர் நடக்கும் போது சிரமப்பட்டார்.
கால்பந்து விளையாட்டில் இருந்து கிடைத்தது
வட கொரிய பிரசார படங்களில் இருப்பதை விட, கால்பந்து போட்டிகளில் வெற்றிபெற்றால் மற்றவரின் முதுகில் ஏறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது பொதுவாக பார்க்கக்கூடியது.
ஆனால், ஆயுத மேம்பாட்டுத் திட்டங்களில், விளையாட்டு மேலாண்மை அணுகுமுறையை கிம் காட்டுவது ஏற்கனவே தெரிந்தது தான்.
“ஒரு பரிசோதனை நடத்தப்பட்டதும், பொதுமக்களும், இராணுவ அதிகாரிகளும், அதனை ஒரு விளையாட்டு போட்டியைப் போல் பார்க்கிறார்கள் (அவர்கள் தெரிவித்தது)- சில வெற்றி, சில தோல்வி” என்று மேடன் கூறுகிறார்.
“எப்போதுமே வெற்றியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் சாத்தியம் இல்லை, தோல்வியில் இருந்து தங்கள் செயல்திறனையும், என்ன நடந்தது என்றும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்”.
இவை அனைத்துமே இயல்பாக திட்டமிடப்பட்டவை என்பதால் அவர் புகைப்படத்தில் உண்மையான மகிழ்ச்சியுடன் இல்லை என்பது அர்த்தமில்லை.
இந்த ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வெற்றியானது, அவரது அணுஆயுத இலக்குகள் நெருங்கி வருவதையும், பாரம்பரியம் காக்கப்படுவதையும் பார்க்கும்போது, இது கொண்டாட்டத்திற்கான சிறந்த தருணம் என்பதில் சந்தேகமில்லை.
இவரது தாத்தா ஜப்பானுக்கு எதிராக கொரில்லா பாணியிலான போரை நடத்தி, நாட்டை விடுதலை பெறச்செய்தார், பொருளாதார ரீதியாக நாடு வறுமையில் இருந்தாலும், கிம்மின் தந்தை வெற்றிகரமாக ஆட்சி நடத்தினார்.
“ஆனால், கிம் ஜோங் உன், விரைவிலேயே தலைவர் ஆகிவிட்டார், அவர் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதையும் செய்யவில்லை”.
“வடகொரியா அணு ஆயுத வல்லமை பெற்றதாக மாறினால் அதுவே கிம்மின் சாதனையாக இருக்கும்”.