கொய்யாப் பழத்தால் பலியான பள்ளி மாணவன்…

பள்ளிக்கூடத்திற்கு தான் கொண்டு சென்றிருந்த கொய்யாப்பழத்தை சக மாணவனுக்குப் பகிர்ந்தளிக்க முயற்சித்த  ஓர் அப்பாவி மாணவன் உயிரிழந்த  சோகம் பொள்ளாச்சி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை விதைத்துள்ளது.

அன்சாத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து உள்ள  ஆனைமலை பகுதியைச்  சர்ந்தவர் சிராஜூதீன். வாய்பேச முடியாதவரான சிராஜுதீன் அந்த பகுதியில் டைலர் கடை வைத்திருக்கிறார். அவரது ஒரே மகனான அன்சாத்(14), அந்தப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான் அன்சாத்.  முதல் பாட இடைவேளையின் போது, தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கொய்யாப்பழத்தை சாப்பிட எடுத்திருக்கிறார். அதில் பாதியை தன் நண்பர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக கொய்யாப்பழத்தோடு கொண்டு வந்திருந்த சிறிய கத்தியை எடுத்து, கொய்யாப்பழத்தை தன் தொடையில் வைத்து அறுக்க முயன்றிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக கொய்யப்பழம் நழுவ அந்த கத்தி அன்சாத்தின் தொடையில் சடாரென பாய்ந்திருக்கிறது,  இதில் வெட்டுப்பட்ட அன்சாத்தின் தொடையிலிருந்து வேகமாக ரத்தம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது.

வலிதாங்க முடியாமல் அலறியிருக்கிறார் அன்சாத். இதைப் பார்த்து பதற்றமடைந்த அன்சாத்தின் வகுப்பு மாணவர்கள்  ஆசிரியர்களிடம் ஓடிப்போய் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். உடனடியாக அங்கு  விரைந்து வந்த ஆசிரியர்கள் படபடப்போடு அன்சாத்தை அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அன்சாத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள்  அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். வாய்பேச முடியாத சிராஜூதீனின் ஒரே மகனான அன்சாத் சற்றும் எதிர்பாராதவிதமாக  பலியான சம்பவம் அவர் குடும்பத்தை மட்டுமல்லாது  அந்தப் பள்ளி மாணவர்களையும்  ஆசிரியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவர்கள்,  “அன்சாத்தின் இடது தொடையில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.  இதில் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ரத்தம் அதிக அளவில் வெளியேறி, இதயம் செயலிழந்ததால்  அன்சாத்  இறந்துள்ளார்” என்று தெரிவித்தனர்.