தமிழகத்தில், இந்தியாவே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது.
திருச்சி அருகேயுள்ள ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள், குலத் தொழில் போல கொள்ளையடிக்கும் தொழிலைச் செய்கிறார்கள். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள், ‘கேப்மாரிஸ்’ என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இன மக்களுக்கு திருடுவதுதான் குலத் தொழில். சுதந்திரத்துக்கு முன், கரூர் அருகே தங்கிய இந்த மக்கள், அருகிலுள்ள கிராமங்களில் கைவரிசைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள். திருட்டுத் தொல்லைத் தாங்காமல், கிராமத்தினர் இவர்களை விரட்டி அடித்துள்ளனர். அப்போதையை திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த மக்களுக்கு ராம்ஜி மில்லில் வேலை வாங்கிக்கொடுத்து தங்கவும் இடமளித்துள்ளார். அப்படித்தான் ராம்ஜி நகர் உருவானது.
மில்லில் வேலைக்குச் சேர்ந்தாலும், திருட்டுத் தொழிலை இவர்களால் விட்டுவிட முடியவில்லை. அந்தக் காலத்தில் பர்மா, மலேசியாவுக்கு வேலைக்குப் போவதுபோல, இவர்கள் கொள்ளைத் தொழிலில் அங்கெல்லாம் சென்று ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களின் செல்வச் செழிப்பைப் பார்த்து, மற்ற மக்களும் கொள்ளையர்களாக மாறிய வரலாறெல்லாம் உண்டு. இந்தியா முழுவதும் குழுக் குழுவாகச் சென்று கைவரிசை காட்டும் இவர்கள், திருடப்போவதற்கு முன், சொந்தக் கிராமத்தில் உள்ள கடவுளுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள். நல்லநாள் பார்த்துதான் திருடப் போவார்கள். திருடிவிட்டு வந்ததும், கன்னியாகுமரி சென்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, முக்கடலும் சங்கமிக்குமிடத்தில் கால்களைக் கழுவி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக, இதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த மக்கள், கொள்ளையில் ஈடுபடுவதோடு சரி. கொலை செய்வதில்லை. போலீஸ் தங்கள்மீது சந்தேகப்பட்டால், போலி நபரை கைதாக வைத்துவிடுகிறார்கள். கைதாகும் நபரின் குடும்பத்துக்குத் தேவையான பணத்தையும் பிற வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள். அப்படி, போலீஸிடம் சரண் அடைபவர்களைக் ‘கொன்னையன்’ என்கிறார்கள். கொள்ளையடிக்கப் போவதை ‘வல்லடைக்குப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் சென்று, குழுக் குழுவாக கைவரிசை காட்டும் இவர்கள், தெலுங்கு கலந்த தமிழில்தான் உரையாடுகிறார்கள். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கிளம்பி கொள்ளைக்குப் போவார்கள். அந்தச் சமயத்தில், ராம்ஜி நகர் ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும்.
2014-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஒரு நகைக்கடையில் கொள்ளை நடந்தது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பதை மோப்பம் பிடித்த கேரள போலீஸ், ராம்ஜிநகரைச் சுற்றி கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தது. அதே வேளையில், ஆந்திர போலீஸ் மற்றொரு கேஸுக்காக அங்கே முகாமிட்டிருந்தது. இப்படி, பல மாநில போலீஸும் ஒரே நேரத்தில் பொறி வைத்து காத்திருக்கும் கிராமம்தான் ராம்ஜிநகர். ராஜஸ்தானில் தமிழக போலீஸார் சந்தித்தது போன்ற மோதலும் இந்த கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள்குறித்து துப்புக் கொடுப்பதற்காக பல குழுக்கள் இயங்கி வருகின்றன.
ராஜஸ்தானில் கொள்ளையர்கள் சொகுசு பங்களா கட்டி வாழ்வதுபோல, இந்த கிராமத்திலும் பல சொகுசு வீடுகள் காணப்படுகிறது. பிள்ளைகளை இன்ஜினீயரிங், மருத்துவம் கூட படிக்க வைத்துள்ளனர். 3 ஆயிரம் சதுர அடிக்கு குறைவாக இந்த கிராமத்தில் வீடு கட்டப்படவில்லை. பெரிய பெரிய இரும்பு கேட்டுகளுடன் வீடுகள் காணப்படுகின்றன. போலீஸார் எளிதில் உள்ளே நுழைந்து விட முடியாதபடி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. கேரள போலீஸ் எடுத்த நடவடிக்கையில் மித்ர மோகன், சத்யாக ஆகியோர் பிடிபட்டனர். இதில், மித்ரமோகனின் வீடு கிட்டத்தட்ட குட்டி அரண்மனை போல காணப்பட்டுள்ளது. அத்தனை அறைகளும் ஏ.சி.வசதி செய்யப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயையும் கேரள போலீஸ் கைப்பற்றியது.
இந்தியா முழுவதும் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் இருந்தாலும் இவர்கள் எளிதில் சிக்கி விடுவதில்லை. சாட்சியங்கள் இல்லாமல் கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். வெளி மாநில மீடியாக்கள் ‘ராம்ஜி நகர் கேங்க்’ என்றே இவர்களைப் பற்றி செய்திகள் வெளியிடுகின்றன.