கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா்.
அங்கு காணாமல் போன உறவினர்களையும்,கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும், மற்றும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார்.
இன்று (08) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போன உறவினர்கள் நடத்தும் போராட்ட கொட்டகைக்கு சென்ற ஹரி ஆனந்த சங்கரி அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி விட்டு கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் பின்னர் கேப்பாபுலவில் அண்மையில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள இடங்களையும், இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள இடங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் ஒளிப்படங்களும் எடுத்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கடந்த 6ஆம் திகதி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.