யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் மாந்திரீக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் சாமியார் உள்ளிட்ட 27 இந்தியர்களையும் நாடுகடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த வாரம் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள், அனைவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் மாந்திரீக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது குறித்த அனைவரையும் நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைத்தரும் பலரும் நாட்டின் பல பாகங்களிலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.