திருகோணமலையில், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அவர் கம்பஹா, யக்கல – மிரிஸ்வத்தை பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் இவ்வாறு நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாகவும், கடத்தல் முறைப்பாடு தொடர்பில் திருமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதால் அவரை திருகோணமலைக்கு நேற்று இரவோடிரவாக அழைத்துச் சென்று ஒப்படைத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருமலை பொலிஸார் முன்னெடுப்பர் எனவும் கடத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அவர்களது விசாரணைகளிலேயே தெரியவரும் எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
திருமலை, நான்காம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த 23 வயதான வாலிபர், கடந்த 5 ஆம் திகதி மாலை தனது காதலியைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. குறித்த இளைஞரின் தந்தை, திருமலையில் பிரபல வர்த்தகராவார். சில வருடங்களுக்கு முன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இளைஞரின் தாய்க்கு கடந்த ஐந்தாம் திகதி இரவு கிடைத்த தொலைபேசி அழைப்பில், இளைஞரின் தந்தை பற்றிய சில விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவே இளைஞரைக் கடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இளைஞரின் தாய் திருகோணமலை பொலிஸில் தமது மகன் கடத்தப்பட்டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இந் நிலையிலேயே அவர் மிரிஸ்வத்தை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.