கர்நாடகாவில் பிரவீன்மூலே ( 23) என்பவர் வீதி விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் கர்நாடக மருத்துவ அறிவியல் மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இதன் போது அங்கிருந்த மருத்துவமனை அதிகாரிகள் பிரவீன் இறந்து விட்டார் என கூறி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அவரது உடலை அனுப்பியுள்ளனர்.
எனினும் மருத்துவமனைக்கு வந்த பிரவீனின் உறவினர்கள் உடலை பரிசோதித்துள்ளனர். இதில் பிரவீனின் இருதய துடிப்பு சீராக இருந்துள்ளது.
அவர்கள் உடனடியாக மருத்துவரிடம் இதுபற்றி கூறியுள்ளனர். ஆனால், 7 மணிநேரம் வரை மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் பிரவீன் வைக்கப்பட்ட நிலையில் அவர் இறந்து விட்டார்.
இதனால் மருத்துவமனை முன் பிரவீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட திரளான மக்கள் கூடி தவறு செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். பிரவீனின் உறவினர்கள் கூறும்பொழுது, பிரவீன் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்தபொழுது அவனது உடலில் அசைவு இருந்தது. ஆனால் மருத்துவர்கள் அங்கு வந்து, உயிருடன் இருக்கிறான் என கூறிய பின்னரும் பிரேத பரிசோதனை செய்தனர் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
அதன்பின் பிரவீன் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரவீன் உறவினர்களின் குற்றச்சாட்டினை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், பிரவீன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபொழுது அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளது. இந்திய செய்திகள் இதனைக் குறிப்பிட்டுள்ளன.