“திருடன்… திருடன்…. ரணில் திருடன்” என்று கூட்டு எதிரணியினரும், “திருடன்… திருடன்…. மகிந்த திருடன்” என்று ஐதேகவினரும் மாறி மாறி குரல் எழுப்பியதால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தின் இன்றைய சிறப்பு அமர்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்ற ஆரம்பித்தவுடன் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள், அவைக்கு நடுவே வந்து “திருடன்… திருடன்…. ரணில் திருடன்” (ஹொரா ஹொரா ரணில் ஹொரா) என்று குரல் எழுப்பினர்.
அத்துடன் “திருடன்… திருடன்.. யார் திருடன்? ரணில் திருடன்” (ஹொரா ஹொரா கௌத ஹொரா? – ரணில் ஹொரா) என்றும் அவர்கள் கூச்சலில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஐதேக உறுப்பினர்களும் அவைக்கு நடுவே சென்று பதில் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் “திருடன்… திருடன்…. மகிந்த திருடன்” (ஹொரா ஹொரா மகிந்த ஹொரா) என்று பதிலுக்கு முழக்கமிட்டனர்.
இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலின் போது, ஐதேக உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன மயங்கி வீழ்ந்தார். உடனடியாக அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதேவேளை, கூச்சலுக்கு மத்தியில் தமது உரையை முடித்துக் கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (கௌத ஹொரா) யார் திருடன்? யார் திருடன்? என்று உரத்து முழக்கமிட்டார்.
அப்போது அவருடன் இணைந்து ஆளும்கட்சி உறுப்பினர்கள் மகிந்த திருடன் மகிந்த திருடன் (மகிந்த ஹொரா) என்று குரல் எழுப்பினர்.