சட்டசபையில் இன்று, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் தங்கமணியும், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக வாதத்தில் குதித்ததால் சிறிது நேரம் அவையில் அனல் பறந்தது.
சுயேட்சை எம்.எல்.ஏவாக டி.டி.வி.தினகரன் பதவியேற்று சட்டசபையில் காலடி எடுத்து வைத்தது முதலே, ஆளும் அ.தி.மு.கவுடன் அவர் கடுமையான மோதலை கடைபிடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுந்தது. இருப்பினும் இதுவரை அப்படி பெரிதாக எந்த ஒரு மோதலும் எழுந்திருக்கவில்லை.
இந்நிலையில் இன்று முதல் முறையாக இரண்டு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் அரங்கேறியது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த வாதத்தில் அ.தி.மு.க பெரும்பான்மை, உட்கட்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், தங்கமணி ஆகியோர் இடையே தான் இந்த விவாதம் சூடாக நடைபெற்றது.
அமைச்சர் தங்கமணி, பா.ஜ.க தலைமையுடன் மிக நெருக்கமாக இருப்பதாகவும், குருமூர்த்தியை அடிக்கடி சந்தித்தது அவர்தான் என்றும், டி.டி.வி.தினகரன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக தங்கமணியும் சேர்ந்து டி.டி.வி.தினகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறு நடைபெற்ற அந்த காரசார விவாதத்தின் நடுவே சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, அரசியல் தொடர்பான கருத்துக்களை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இதற்கு முடிவுரை எழுதினார்.
அதோடு, இந்த பேச்சுக்கள் அனைத்துமே அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், அரை மணிநேரம் நடைபெற்ற இந்த விவாதம் சபை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.