எம்.எல்.ஏக்களை தக்க வைத்துக் கொள்ளவே ஊதிய உயர்வு என்று டி.டி.வி.தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத் தொடர் தொடங்கியது.
மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதனையடுத்து சட்டசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த இந்த மசோதாவின் மூலம் எம்எல்ஏக்களின் ஊதியம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயரும்.
இந்த நிலையில் நேற்று போலவே இன்றும் டி.டி.வி.தினகரனுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
அப்போது சட்டசபையில் இருந்து வெளியே வந்த தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சட்டப்பேரவையில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்து வருகிறார்.
தமிழக அரசானது தற்போது கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்து துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளும் நிதி பற்றாக்குறையில் சின்னாபின்னமாகி உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் இந்த எடப்பாடி அரசு மறைத்து நாடகமாடி வருகிறது.
என்னை துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணிதான். எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் தக்க வைத்து கொள்ளவே ஊதிய உயர்வை அளிக்கும் மசோதாவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
துணை முதல்வர் ஓபிஎஸ் செய்வதற்கு பெயர்தான் குடும்ப ஆட்சி. அவருடைய சம்பந்திதான் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். ஓ.பி.எஸ் யாருக்கோ விசுவாசமாக இருக்க முயல்கிறார். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.