ஸ்ரீவில்லிப்புத்தூரில், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒருங்கிணைத்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் ஆழ்வாளர்களுள் ஒருவராக கருதப்படுகிற ஆண்டாள் குறித்து சில கருத்துக்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த பேச்சிற்கு தமிழகத்தின் இந்துத்துவ அமைப்புக்கள் மற்றும் பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் நிர்வாகியான ஹெச்.ராஜா, ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சிற்காக கவிஞர் வைரமுத்துவை மிக கடுமையாக சாடியதுடன், தனிப்பட்ட முறையிலும் மிக கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இந்துத்துவ அமைப்புகளும் வைரமுத்துவுக்கு எதிராக அணிதிரள துவங்கியுள்ளன.
முன்னதாக, தாம் ஆண்டாளின் பெருமையை மட்டுமே பேசியதாகவும், ஆண்டாள் குறித்த சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது என் நோக்கமல்ல என வைரமுத்து கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.