நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், தான் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்திற்கு கவர்ச்சி நடிகை சில்க் மாதிரி பெண் வேண்டும் என்று தேடி வருகிறார்.
தற்போது உள்ள சூழ்நிலையில், இணையதளம் சினிமா உலகில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. ஒரு ஹீரோ மற்றொரு ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவிப்பது, நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவது, இயக்குனர்கள் நடிகர் நடிகைகளை இணைய தளத்தில் தேடுவது என கோலிவுட் புதிய டிரென்ட்டாகி வருகிறது.
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் உள்ளே வெளியே 2ம் பாகம் இயக்க முடிவு செய்துள்ளார். உள்ளே வெளியே 2ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார்.
தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதி-வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை’ என தேடுதல் வேட்டை தொடங்கி இருக்கிறார்.
‘உள்ளே வெளியே’ படத்தின் முதல் பாகத்தை கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கினார். அதில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.