தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!

ராஜஸ்தானில் தனது விதவை தாய்க்கு மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.

38984ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் 53 வயது நிரம்பியவர். இவரின் கணவர் முகேஷ் குப்தா மாரடைப்பு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார். பின்னர் தனது தாயை தனிமையில் விட்டு வந்துவிட்டோம் என வருந்திய அவர், தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அத்துடன் தனது தாயின் தகவல்களை திருமண வலைதளத்திலும் பதிவு செய்தார்.

இதையடுத்து ஜெய்பூர் வந்த சன்ஹிடா, தனது தாயிடம் இந்த விஷயத்தை கூறினார். இதைக்கேட்டு பயந்த கீதா மறுப்பு தெரிவித்தார். அத்துடன் சன்ஹிடாவின் அக்கா சக்ஷியும் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாரம்பரிய வழக்கத்தை கொண்ட கீதாவின் குடும்பத்தினரும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் மனம் தளராத சன்ஹிடா தொடர்ந்து பேசி தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர், சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார்.

அவரை சன்ஹிடா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சன்ஹிடா, ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துள்ளார்.

இதையடுத்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட கீதா அறுவை சிகிச்சை மூலம் தனது கருப்பையை நீக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து திருமணமும் நடைபெற்று தற்போது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது தாயின் முகத்தில் சமீப காலமாக சிரிப்பை காண முடிவதாக சன்ஹிடா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.