இந்திய அரசியல் வரலாற்றிலும் அழகி போட்டி …!!

பிரதமர் மோடி, இள வயதில் டீ விற்றதாகச் சொல்வர். பிரதமர் முதல் லேட்டஸ்டாக அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் வரை பலரும் எளிய பின்னணி கொண்டவர்களே. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொல்கத்தாவில் டெபுடி அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக வாழ்க்கையைத் தொடங்கியவர். பேராசிரியராகப் பகுதி நேரப் பத்திரிகையாளராகவும்கூட பணிபுரிந்த அவர், அரசியலில் புகுந்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரானார். நிதியமைச்சராகப் பதவி வகித்த அவர்,  2012-ம் ஆண்டு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தார். தற்போதையக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கான்பூரில் சட்டம் பயின்றவர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மூன்றாவது முயற்சியில் தேர்வுபெற்றவர்தான். குடியரசு முன்னாள் தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிந்தவர்.

காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகாலம் பதவி வகித்த சோனியா காந்தி, கேம்ப்ரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் வெயிட்ரஸாகப் பணிபுரிந்தவர். இத்தாலியின் விஸின்சியா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ரெஸ்டரான்டில்தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனார்.

இந்திய அரசியல்வாதிகளில் ராகுல் காந்தி பணக்காரக் குடும்பத்தின் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவரும் எளிமையாகவே வாழ்க்கையைத் தொடங்கியவரே… லண்டனில் உள்ள மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனமான மானிட்டர் குழுமத்தில் சில காலம் பணிபுரிந்தார். பிறகு, மும்பையில் பேக்கப் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, சமீபத்தில்தான் அந்தக் கட்சியின் தலைவராக உயர்ந்துள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் சட்டம் பயின்ற பிறகு, கலிங்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மம்தா மிகச்சிறந்த கவிஞரும்கூட. ஓவியமும் வரைவார். மம்தா 15 வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர் என்பது கூடுதல் தகவல். மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, இந்திய அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவர். 1998-ம் ஆண்டு இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். தொலைக்காட்சிப் பிரபலமாக அரசியலுக்குள் நுழைந்து, தற்போது டெக்ஸ்டைல் துறை அமைச்சராக உயர்ந்திருக்கிறார்.

அதிரடிக்கு பெயர்போன மாயாவதி, ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். இவருக்கு ஐ.ஏ.எஸ் ஆவதுதான் இலக்கு. 1977-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம், இவரின் வீட்டுக்கு விசிட் செய்தார். மாயாவதியின் திறமை, கல்வியறிவு கன்சிராமைக் கவர, மாயாவதி அரசியலுக்குள் நுழைந்தார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உள்ள மாயாவதி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சமஸ்கிருதம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்றவர். சட்டம் பயின்று 1973 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றார். 2014-ம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சரானார் சுஷ்மா. லாலுவும் மிக எளிமையாகவே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான். பீகார் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அலுவலக ஊழியராகப் பணியைத் தொடங்கியவர். பிற்காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவராகி, பீகார்  மாநில முதலமைச்சராக 1990 முதல் 97-ம் ஆண்டு வரை பதவிவகித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை  ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் லாலு.

இந்திய அரசியல்வாதி மாயாவதி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர், 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள The Fletcher School of Law and Diplomacy பல்கலையில் சட்டம் பயின்றார். 1978 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார். சிங்கப்பூரிலும் ஐ.நா-வில் பணிபுரிந்துள்ளார். பால்தாக்கரே கார்ட்டூனிஸ்ட். அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஊழியர். அமித்ஷா பங்குசந்தை புரோக்கர். மன்மோகன்சிங்  பேராசிரியராகப் பணிபுரிந்தவர். நிதிஷ்குமார் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, பீகார் மின்வாரியத்தில் பணி புரிந்தவர்.