பிள்ளைகளின் கல்விக்காக மலையை குடைந்த தந்தை ??

இரண்டு ஆண்டுகள் தனி ஆளாகக் களத்தில் இறங்கி மலையைக் குடைந்து 15 கி.மீ சாலையை உருவாக்கியிருக்கிறார் ஜலந்தர் நாயக்.

jalandhar

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள கும்சகி என்னும் மலைக்கிராமத்தில் வசித்து வருபவர் ஜலந்தர் நாயக். கும்சகி கிராமத்திலிருந்து டவுனுக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. பள்ளி, மருத்துவமனை என எதுவுமே கிராமத்துக்கு அருகில் இல்லை. எதுவாக இருந்தாலும் மலையைக் கடந்துதான் போக வேண்டும். இதனால் கும்சகி கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஜலந்தருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். அவர்களை எப்படியாவது பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதே அவரின் கனவு. காய்கறி விற்பனை செய்துவரும் ஜலந்தர், மலையைக் குடைந்து சாலை அமைக்க முடிவு செய்தார். அரசின் உதவியை அவர் நாடவில்லை. தனி ஆளாகக் களத்தில் இறங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மலையைக் குடைந்து சாலையை அமைக்க தொடங்கியவர், தற்போது 15 கி.மீ தூரத்துக்குச் சாலை அமைத்துவிட்டார். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். மீதமுள்ள நேரத்தில் காய்கறி விற்று பணம் சம்பாதித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரின் முயற்சியை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஜனவரி 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜலந்தரை அழைத்துப் பாராட்டிய பிறகுதான், கிராம மக்களுக்கு அவர் செய்துவரும் அசாத்திய காரியம் தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஜலந்தரைக் கெளரவப்படுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவருக்கு உதவித் தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக இந்த அசாத்தியமான காரியத்தை செய்துமுடித்த ஜலந்தரைப் போன்று வேறு யாரும் தனி ஆளாக மலையைக் குடைந்து சாலை அமைத்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்ததில் கிடைத்த தகவல் பின்வருமாறு..

 

Dasrath Manjhi

Dasrath Manjhi
தஷ்ரத் மாஞ்சி என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட  பாலிவுட் படம் ’மவுன்டன் மேன்’. பீகாரைச் சேர்ந்த தஷ்ரத் மாஞ்சி தன் வாழ்க்கையின் 22 ஆண்டுகளை 360 அடி சாலை அமைப்பதில் கழித்துள்ளார். காரணம் அவரின் மலைக் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் அவரின் உடல்நிலை சரியில்லாத மனைவி இறந்துவிட்டார். இனி யாரும் அப்படி இறக்கக் கூடாது என்பதற்காக அவரின் மீதமுள்ள வாழ்க்கையை சாலை அமைப்பதில் செலவழித்தார். தஷ்ரத் மாஞ்சி மற்றும் ஜலந்தர் நாயக் வரலாற்று ஹீரோக்கள் என்பதில் சந்தேகமில்லை!