நகரமயமாக்கலில் இந்தியா சீனாவைப் பின்பற்றக் கூடாது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார், “நகரமயமாக்கலில் இந்தியா வெளிநாடுகளைப் பின்பற்றக் கூடாது. ஆனால், நாம் தொடர்ந்து அந்தத் தவற்றைதான் செய்துகொண்டிருக்கிறோம். அங்கிருக்கும் மாதிரிகளை இங்கும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருகிறோம்.
இந்தியாவில் சமநிலையற்ற நகரமயமாக்கல் சிக்கலாகவே போய் முடியும். சீனா என்ன தவறு செய்ததோ அதை இந்தியா செய்யக் கூடாது. சீனாவில், வளர்ச்சியும் நவீனமயமாக்கலும் கடற்கரையோரங்களில்தான் நிகழ்ந்தன. அங்குதான் நகரங்கள் உருவாகின. இதனால் கிராமங்களிலிருந்து ஏராளமானவர்கள் பிழைப்பு தேடி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர்.
பண்டிகைகளின்போது அவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு சீனப் புத்தாண்டின்போதும் 40 முதல் 50 லட்சம் சீனர்கள் கடற்கரை நகரங்களிலிருந்து நாட்டின் மத்தியப் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். இது இந்தியாவில் நிகழ்ந்துவிடக் கூடாது. தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளின்போது மக்கள் வடக்கிலிருந்து தெற்குக்கும் மேற்கிலிருந்து கிழக்குக்கும் நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது” என்றார்.
நிதி ஆயோக், திட்டக்குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அரசின் கொள்கை முடிவுகளை வடிவமைப்பதும் ஆலோசனைகள் வழங்குவதும் இந்த அமைப்பின் வேலைகளாகும். பிரதமர் இதன் தலைவராக இருப்பார்.