தமிழக சட்டசபையில் வாக்குவாதம்! தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது யார்?

மத்திய அரசு நிதி தொடர்பாக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசிற்கு தமிழக அரசு நன்றிக் கடன்பட்டிருக்கிறதா? என்று நினைக்கத் தோன்றுவதாகவும், ஆளுநர் உரையில் மத்திய அரசுக்கு அத்தனை நன்றிகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக மக்கள் நலனுக்காக இந்த அரசு எதையும் சாதிக்கவில்லை என்றும், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், வர்தா புயல் போன்ற பேரிடர் சமயங்களில் மத்திய அரசிடம் கேட்ட நிதியை தமிழக அரசு பெற்றதா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் உதயகுமார், தமிழக நலனுக்காக மத்திய அரசிடம் பெற்ற நிதியை புள்ளி விவரத்துடன் சொல்ல முடியும் என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அப்படியானால் அதுபற்றி கவர்னர் உரையில் ஏன் எதையும் குறிப்பிடவில்லை எனக் கேட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் பழனிசாமி, மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் எவ்வளவு நிதி பெறப்பட்டது என்றும், என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

உடனே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசு திட்டங்களை மு.க. ஸ்டாலின் பட்டியலிடத் தொடங்கினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், அந்தப் பட்டியலில் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இதனால், அதிருப்தியடைந்த திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், பேரவையில் தவறான தகவல்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது உங்கள் தலைவர் தான் என்றும் பதிலளித்தார்.

அப்போது குறுக்கிட்ட தங்கமணி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீவிரவாதத்திற்கு எதிரானவர் என்றாலும், ஈழத் தமிழர் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருந்தவர் என விளக்கமளித்தார்.

இதனால் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து அவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்தார்.