மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவ மழை குறைவடைந்துள்ளதனால், பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பலத்த இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெரும்போக வேளாண்மைச் செய்யை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் மேட்டு நிலங்களிலும் நிலக்கடலை, சோளன், பயற்றை என உப உணவுப் பயிரினங்களும் செய்கையிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பருவமழை இல்லாததனால் விவசாயிகள் அதிக பிரயத்தனத்தின் மத்தியில், அதிக செலவு செய்து நீர் பம்பிகள் மூலமும், உழவு இயந்திரங்கள் மூலமும் வயல்களுக்கு நீரை இறைத்து வருகின்றனர்.
தற்போது வடகீழ் பெருவப் பெயர்ச்சிக் காலமாக இருந்தாலும், நெல் விதைத்த காலத்தில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ள போதிலும், தற்போது பெரும்பாலான நெற்பயிர்கள், குடலைப் பருவத்தில் காணப்படுகின்றன. வேளாண்மைக்கு இப்பருவத்தில், நீரில்லாமல் கருகிப்போகும் நிலைமைக்கு பயிர்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறிய குளங்களிலும், வாய்க்கால்களிலும் தேங்கிக் காணப்படும் நீரை விவசாயிகள் உழவு இயந்திரங்கள் மூலமும், நீர் பம்பிகள் மூலமும், வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று(11.01.2018) காலை மாவட்டத்தின் பல இடங்களில் சிறியளவில் மழை பெய்துள்ளமை விவசாயிகளுக்கு ஓரளவு திருப்பதியளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.