ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்!!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலை “ஜெயலலிதா: மனமும் மாயையும்” என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் வரலாற்றை வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகவிருந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.

அதையடுத்து அந்த நூலின் வெளியீடு தடை செய்யப்பட்டதோடு, இன்னும் வெளிவராமலேயே இருக்கிறது.

இப்போது நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள இந்த நூலில், தான் நீண்ட காலமாகத் திரட்டிய தகவல்களின் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்வதோடு, அறியப்படாத அவரது பல பக்கங்களையும் முன்வைக்கிறார் வாஸந்தி. இந்த நூலின் சில பகுதிகள் இங்கே…

_99538161_jayal-7-01-01எம்.ஜி.ஆருக்கு அந்த நாசூக்கான பதின் வயதுச் சிறுமியைப் பிடித்துப்போனது. மற்ற ஹீரோயின்களிலிருந்து அவள் மாறுபட்டாள்.

எந்த வம்பிலும் சிரத்தையில்லாமல், சதா புத்தகமும் கையுமாக இருந்த, கான்வென்ட் ஆங்கிலம் பேசும் அந்த பால்வடியும் முகம் அவரை ஈர்த்தது.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். தனக்கு ஆதர்ச மனிதராக, புரவலராக, நெருங்கிய நண்பருக்கு மேற்பட்ட உறவில் இருப்பார் என்று கற்பனைகூட செய்திருக்க முடியாது.

எம்.ஜி.ஆர் அவருக்கு தந்தை வயதில் இருந்தவர். இருவரும் சேர்ந்து 27 படங்களில் நடித்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் வெற்றிப்படங்கள் ஆயின.

ஜெயலலிதா நடித்தது நூறு படங்களுக்கு மேல், பல சூப்பர் ஹிட் படங்கள் – தமிழில் 82, தெலுங்கில் 26, கன்னடத்தில் ஐந்து என்ற பட்டியலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த ஒரு இந்திப் படமும் ஆங்கிலப் படமும் உண்டு.

தமிழ் ரசிகர்களுக்கு, முக்கியமாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்வதுதான் அதிக விருப்பமாக இருந்தது.

அவர்கள் இருவரிடையே ஒரு இயல்பான ரசாயன இயைபு ஏற்படுவதுபோல இருந்தது. எம்.ஜி.ஆரே ஜெயலலிதாவை எனக்கு ஹீரோயினாகப் போட்டால்தான் நடிப்பேன் என்று சொல்ல ஆரம்பித்தார்.

நிச்சயம் அதை யாரும் ரசிக்கவில்லை. அது அசம்பாவிதமானதாகப் பட்டது. எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு பயந்து வாயைத் திறக்காமல் இருந்தார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவரும் படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் அதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டுமென பரபரத்தார்.

_99538167_jeyalalithawrapperprintfinalஎல்லோரது கவனத்திலும் வராத ஒரு விஷயம் இருந்தது. ஜெயலலிதாவுக்கே நாளாக நாளாக அலுப்பூட்டும் வகையில் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாடு அதிகரித்தது. அவருடைய எல்லா செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் – அவள் அணியும் உடையைக்கூட – கட்டுப்படுத்தவும் துவங்கினார்.

அவருடைய பணத்தைக்கூட எம்.ஜி.ஆர்தான் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். செலவுக்கு அவர் எம்.ஜி.ஆருடைய சுமுகம் பார்த்துப்பெற வேண்டியிருந்தது.

பல சமயங்களில் இது மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. மூச்சு முட்டியது. உறவை முறித்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. எம்.ஜி.ஆருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் இறங்க வேண்டியிருந்தது”.

******

_91913942_chandrothayam1966ல் வெளியான ‘சந்திரோதயம்’

எம்.ஜி.ஆருடனான ஜெயலலிதாவின் உறவு எழுபதுகளின் மத்தியில் சிக்கலானது. ஆர்.எம்.வீயின் விடா முயற்சியால் எம்.ஜி.ஆர். வேறு கதாநாயகிகளுடன் நடிக்க ஆரம்பித்தார்.

அனால், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவின் மீது இருந்த பிரேமையோ மோகமோ அடிநாதமாக அவருள் இருந்தவண்ணம் இருந்ததற்கான அடையாளங்கள் மீண்டும் மீண்டும் புதுப்பித்துவந்ததிலிருந்து தெளிவானது.

… “எம்.ஜி.ஆர். ஒரு சர்வாதிகாரியாகத்தான் ஜெயலலிதாவை நடத்துவார். திடீர்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்வார் படப்பிடிப்புக்கு ஜெயலலிதாவை அழைக்கனும்னு, அவங்களைக் கேட்காம.

ஜெயலலிதா உடனே தன்னுடைய ஷூட்டிங்கை ரத்து செஞ்சுட்டுப் போகனும், இல்லேன்னா எம்.ஜி.ஆருக்கு கோவம் வரும்.

ஐயோ, ஜெயலலிதாவை அந்த ஆள் ரொம்ப இம்சை செஞ்சிருக்கார்” என்றார் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

1972ல் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கி அரசியலில் ஆழ்ந்து போனதும் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்துபோனது.

_91913940_venniradai1-021965ல் வெளியான ‘வெண்ணிற ஆடை’

தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடிப்பதில் மிகவும் மும்முரமானார் ஜெயலலிதா. அப்போதுதான் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் நட்பு ஏற்பட்டது.

ஷோபன் பாபு எம்.ஜி.ஆரைவிட வயதில் இளையவர். அது தீவிரமான நட்பாக மலர்ந்தது. அதைப் பற்றி ஜெயலலிதாவே தனது (பாதியில் முடிந்த) சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய நெருங்கிய தோழிகள் சாந்தினிக்கும் ஸ்ரீமதிக்கும் இது குறித்துத் தெரிந்திருந்தது.

ஷோபன் பாபுவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார்.

மற்ற பெண்களைப் போல இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டார் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அந்தத் திருமணம் நடக்கவில்லை.

ஆனால், சாந்தினி புலானி சொன்ன கதையோ வேறு மாதிரி இருந்தது. சாந்தினிக்கு அது எந்த வருஷம் என்று சரியாக நினைவில்லை.

1977 அல்லது 78ஆக இருக்கலாம் என்றார். சாந்தினியையும் அவருடைய கணவர் பங்கஜ் புலானியையும் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

விருந்துக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான புகைப்பட ஆல்பத்தைக் காண்பித்தார். அதில் அவருக்கும் சோபன் பாபுவுக்கும் நடந்த திருமண புகைப்படங்கள் இருந்தன.

“சரியான ஐயங்கார் பிராமண முறைத் திருமணம். சாஸ்திரிகள் செய்வித்த போட்டோவோட. அந்த ஆல்பம் எத்தனை பெரிசு தெரியுமோ? ஒரு பெரிய மேஜை முழுக்க அடைத்தது.

நாங்கள் படங்களைப் பார்க்க மேஜையைச் சுற்றி நடக்க வேண்டியிருந்தது. ஜெயா ரொம்ப மகிழ்ச்சியா இருந்தா. “அவர் ஒரு அற்புத மனிதர். நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள். மணப்பெண் மாதிரி கன்னம் சிவந்துபோச்சு வெக்கத்திலே. அவ ரொம்ப சந்தோஷமா இருந்ததை என்னால புரிஞ்சுக்க முடிந்தது”.

ஆனால், அந்த ஆல்பம் ஒரு புதிராகவே இருக்கிறது. மற்றவர்கள் சொல்லும் தகவல்படி அந்தத் திருமணம் நடக்கவேயில்லை.

****

_91918667_jayalalitha-12

ஜூலை 13-14, 1986 அன்று மதுரையில் ஒரு மாபெரும் ரசிகர் மன்ற மாநாடுக்கு ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்பாடு செய்யும் பணிகளில் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத்தார்.

ஜெயலலிதாவை ஆதரிக்கும் அணிக்கும் அவரை எதிர்க்கும் அணிக்கும் இடையே நடந்துவந்த மௌன யுத்தத்தில் ஜானகி எதிரணியில் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.

எம்.ஜி.ஆர். மறுபடி ஜெயலலிதாவுடன் தொடர்பு வைப்பதில் அவருக்கு விருப்பமில்லாவிட்டாலும் எம்.ஜி.ஆரின் முடிவுகள் அரசியல் சம்பந்தப்பட்டவை என்று புரிந்துகொண்டு பேசாமல் இருந்தார்.

ஜெயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். ஊர்வலம் செல்வதற்கு முன் கட்சிக் கொடியை அசைத்து ஆரம்பித்துவைத்தார்.

நிறைவு தினத்தன்று எம்.ஜி.ஆர் பேசுவதற்கு முன் மேடையில் பேசினார். தங்க முலாம் பூசப்பட்ட ஆறு அடி வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்குப் பரிசளித்தார்.

எம்.ஜி.ஆரின் காலைத் தொட்டு வணங்கினார். கடலாய் கூடியிருந்த மக்கள் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அவருக்கு எதாவது முக்கிய பொறுப்பும் பதவியும் தருவதாக எம்.ஜி.ஆர். அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதுவும் நடக்கவில்லை. விழா முடிந்தததும் அவர் பக்கமே திரும்பாமல் எம்.ஜி.ஆர். ஜானகியுடன் புறப்பட்டுப் போனார். அவருக்கு முகத்தில் அடித்தாற்போல இருந்தது. …தாங்க முடியாத கோபத்துடன் ஜெயலலிதா சாலை வழியாக சென்னைக்குப் பயணித்தார்.

…. அந்த அவமானத்தைத் தன்னால் பொறுக்க முடியாததுபோல இருந்தது. அதற்கு ஒரு வடிகால் வேண்டியிருந்தது.

தன் புதிய தோழி சசிகலாவிடம் ஜானகியைப் பற்றி என்ன சொன்னார் என்பது தெரியாது. ஆனால், பிறகு எம்.ஜி.ஆருக்கு மன்னிப்புக் கேட்டு எழுதியதிலிருந்து ஏதோ தகாத வார்த்தைகளால் திட்டியிருப்பார் என்று யூகிக்கலாம். அதன் விளைவாக எம்.ஜி.ஆரின் கோபம் அதிகரித்ததும் தெரிகிறது.

தனது பொருமலைக் கேட்டுக்கொள்ள ஒரு தோழி கிடைத்த தெம்பில் மதுரையில் இருந்து தணியாத கோபத்துடன் திரும்பிய ஜெயலலிதா சசிகலாவிடம் வெடித்தார்.

யாரிடம் என்ன பேசுகிறோம் என்கிற நிதானம் இல்லாமல் ஜானகியைப் பற்றி நாகரீகமற்ற வார்த்தைகளால் திட்டியிருப்பார் என்று பத்திரிகையாளர் சோலை நினைக்கிறார்.

எம்.ஜி.ஆரின் செவிக்கு அவர் சசிகலாவிடம் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் போகக்கூடும் என்ற யோசனை ஜெயலலிதாவுக்கு இல்லாமல் போனதால் கூச்சமில்லாமல் வார்த்தைகள் விழுந்திருக்கும். எம்.ஜி.ஆரின் கோபத்துக்கு அதுதான் காரணம்.

ஜெயலலிதா பேசியது எப்படி அவர் செவிகளுக்குச் சென்றது என்று சசிகலாவிடம் விளக்கம் கேட்டாரா என்று தெரியாது.

_91918528_jayalalitha-6

தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ஒத்துக்கொண்டிருந்தவருக்கு, முடிவு வந்ததும் தன் தயவு இல்லாமல் பா.ஜ.கவுக்கு ஆட்சி அமைக்க முடியாது என்ற எண்ணம் வந்துவிட்டது.

கொஞ்சம் பிகு செய்தால் மண்டியிடுவார்கள் என்ற நினைப்பு வந்தது. பா.ஜ.கவினருக்கு அவருடன் தொடர்புகொள்ளவே முடியாமல் போக்குக் காட்டினார்.

ஏக நிபந்தனைகளை வைத்தார். தான் விரும்பும் ஆட்களையே அமைச்சராக்க வேண்டுமென்றார். வாழப்பாடி ராமமூர்த்திக்கு நிதி மற்றும் வங்கித்துறை அளிக்க வேண்டும்; தம்பிதுரைக்கு சட்டத்துறை வழங்க வேண்டும் என்றார்.

அவரை ‘ஸ்திர புத்தி இல்லாதவள்’ என்று வர்ணித்திருந்த சுப்ரமணியம் சுவாமிக்கு நிதித்துறை அளியுங்கள் என்றார்.

ஒரு காலத்தில் அவருடைய சார்பாக வழக்கு ஒன்றில் வாதாடியிருந்த மிக சீனியர் வக்கீல் ராம் ஜேட்மலானிக்கு ஜெயலலிதா செய்திருந்த நிபந்தனைகளால் சட்டத்துறை வழங்கப்படாமல் நகர்ப்புற வளற்ச்சித்துறை கிடைத்து அதிர்ச்சி அளித்தது.

ஜெயலலிதாவுடன் அவருக்கு சுமுக உறவு இருந்த நிலையில், சுப்ரமணியம் சுவாமிக்கு நிதித்துறை அளிக்க வற்புறுத்துவது ஏற்புடையதல்ல என (ஜெயலலிதாவிடம்) விளக்குமாறு வாஜ்பாயி ஜேட்மலானியிடம் கேட்டுக்கொண்டார்.

ஜேட்மலானி ஜெயலலிதாவிடம் தொடர்புகொண்டு, “என்ன பைத்தியக்காரத்தனம் இது, சுவாமி உன்னை என்னவெல்லாம் தூற்றியிருக்கிறார்.

அவருக்கு நிதித்துறை அளிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறாய்?” என்றார். அவர் பிடிவாதமாக சுவாமிக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த ஜேட்மலானிக்கு மிகுந்த கோபம் வந்தது.

“இந்த மாதிரி ஒரு அசட்டுப்பேச்சை நான் கேட்டதே இல்லை, நான்சென்ஸ்!” என்று தொலைபேசியைப் பட்டென்று வைத்தார். அதற்குப் பிறகு ஜெயலலிதாவுடன் அவருக்கு உறவே இருக்கவில்லை.

_99044410_jayal03

2001ல் ஜெயலலிதா பதவியேற்றபோது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னார், “அவர் நிறையப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்.

அவரை அணுகுவதில் சிரமம் இருக்காது. அவருடன் பணிபுரிவதும் எளிதாக இருக்கும்.” ஆனால், ஒரே மாதத்தில் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.

அமைச்சர்களுடனோ அதிகாரிகளுடனோ கலந்துபேசாமல் கருணாநிதியைக் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வாதிகாரியாக வலம்வந்தார். .. அவருடைய அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்தினார்.

அரசு என்ன செய்கிறது என்பது பரம ரகசியமாக இருந்தது. அமைச்சரவையைக் கூட்டினார்.

கூடவே அமைச்சர்களின் இலாகாவை இஷ்டத்திற்கு மாற்றினார். இரண்டு ஆண்டுகளில் பதினோரு மாற்றங்கள் இருந்தன. 23 அமைச்சர்கள் பதவியிழந்தார்கள். அதில் ஐந்து பேர் திரும்ப அழைக்கப்பட்டார்கள்.

‘அம்மாவின் கீழ் நாளை என்பது யாருக்கும் நிச்சயமில்லை’ என்றார் ஒரு அ.தி.மு.க. தலைவர். ‘பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தினால்தான் வேலைசெய்வார்கள் என்று நினைக்கிறார்’.

… எந்த அமைச்சரும் சுதந்திரமாகக் கருத்துச் சொல்வது அவருக்குப் பிடிக்காது. வாயைத் திறந்தால் கழுத்தில் கத்திவிழும் என்று அவர்களுக்குத் தெரியும்.

அவருடைய ஆட்சியில் வேலை செய்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி சொன்னார், “அவருக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே நாங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வாதத்தில் குறையிருப்பதை யாராவது சுட்டிக்காட்டினால் அவருக்கு மகா கோபம் வந்துவிடும். எல்லோரும் வாயடைத்துப்போவோம்.”

_91918755_jayalalitha-5

ராஜ்பவனுக்கு ஜெயலலிதா சென்ற வாகனத்தில் மூவர்ணக் கொடி இல்லை, அ.தி.மு.க. கொடி மட்டும் இருந்தது. ஆளுனர் ஸி.கே. ரங்கராஜனிடம் தான் பதவி விலகப்போவதாகவும் புதிய முதல்வர் அன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

அதற்கிடையே என்னவெல்லாமோ வதந்திகள் பரவத் துவங்கின. சசிகலா குடும்பத்துடன் அவர் பல மணி நேரம் ஆலோசனையில் இருந்ததாகச் சில பத்திரிகைகள் எழுதின.

சசிகலாதான் அடுத்த முதல்வர் என்ற வதந்தி காட்டுத்தீயைப் போலப் பரவியது. கடைசியில் யாரும் சற்றும் எதிர்பாராதவகையில் பெரியகுளம் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டசபை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருந்த ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக அவர் நியமித்தது எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஏழை விவசாயியின் மகனான பன்னீர்செல்வம் ஒரு பட்டதாரி.

எளிமையானவர், பணிவானவர் என்று அறியப்பட்டிருந்தார். சசிகலாவின் மருமகன் தினகரனின் நல்லெண்ணத்தைப் பெற்றவர். தினகரன் பெரியகுளம் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்காக நின்றபோது அவருக்காக பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்ததில் தினகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகியிருந்தார். தினகரன் செய்த சிபாரிசினாலேயே ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்பட்டது. நல்லவேளை சசிகலா தேர்வுசெய்யப்படவில்லையென கட்சிக்காரர்கள் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டார்கள்.

ஆனால், ஜெயலலிதாவின் முடிவினால் அதிக திகைப்பும் பீதியும் அடைந்தது பன்னீர்செல்வம்தான் என்பது மறுநாள் பத்திரிகைகளில் வந்திருந்த அவரது புகைப்படங்களில் தெரிந்தது.