கணவனுக்குமுன் உயிர் துறந்த சென்னை பெண்!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

chennai_14156-696x492

சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் பிரகாஷ் துடித்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் சிகிச்சை பெற்றார்.

அப்போது, அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல், பிரகாஷ் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மற்றவர்களைவிட பிரகாஷின் மனைவி உமா மகேஸ்வரி சோகத்தில் உறைந்தார்.

கணவரைக் காப்பாற்ற போராடினார். ஆனால், நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால்,பிரகாஷ் வேதனையில் துடித்தார். அவரது வேதனையைப் பார்க்க முடியாமல் உமாமகேஸ்வரி தவித்தார்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 9-ம் தேதி உமாமகேஸ்வரி, கோயிலுக்குச்செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றார். இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில்,  மகன் கேசவனின் செல்போனுக்கு  எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார் உமாமகேஸ்வரி. அதில், ‘அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள்.

நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன்’ என்று  கூறியிருந்தார். இதைப் பார்த்த கேசவன், பிரகாஷ்  இருவரும் கதறினர்.

பிறகு சேகவன், தன்னுடைய உறவினருடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று விவரத்தைத் தெரிவித்தார். போலீஸாரும் மாயமான உமாமகேஸ்வரியைத் தேடினர்.

இந்த நிலையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒதுங்கியது. அந்தப் பெண்குறித்து விசாரித்தபோது, அது உமாமகேஸ்வரி என்று தெரியவந்தது.

இதையடுத்து, உமாமகேஸ்வரியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உமாமகேஸ்வரி மாயமான தகவலைக் கேட்ட அதிர்ச்சியில், பிரகாஷின் உயிரும் பிரிந்தது.

இதையடுத்து, பிரகாஷின் இறுதிஅஞ்சலி நேற்று நடந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து உமாமகேஸ்வரியின் இறுதி அஞ்சலி இன்று நடந்தது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரகாஷுக்கு  சிகிச்சை அளித்த டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர்.

இதனால், அவரது மனைவி உமாமகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அடிக்கடி பிரகாஷிடம், பூவும் பொட்டுமாக வாழ்ந்த என்னால்  நீங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று புலம்பியிருக்கிறார்.

அப்போது, பிரகாசும் கேசவனும் உமாமகேஸ்வரிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் உமாகேஸ்வரி, விரக்தியில் சில தினங்களுக்கு முன்பு கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது பிரிவால் பிரகாசும் இறந்துவிட்டார்’ என்றனர்.

அப்பாவையும் அம்மாவையும் ஒரே நாளில் இழந்த சோகத்தில் கேசவன் கதறிஅழுதது கல்நெஞ்சையும் கரையவைத்தது. ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சாவிலும் இணைபிரியாத இந்தத் தம்பதிகுறித்து மந்தைவெளி பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.