நாடு பிடிக்கும் ஆசை அந்தக் காலத்தில் மன்னர்களுக்கிடையே மிகுதியாக இருந்தது. இதற்கு காரணம் அப்படி போரிட்டு வென்ற பகுதிகளில் இருந்து கிடைக்கும் எண்ணற்ற செல்வங்கள், அந்த நாட்டிலிருந்து கிடைக்கும் வரி, பணம் போன்றைவை தான் முக்கிய காரணங்களாக இருந்தன.
அந்த மாதிரி போரிட்டு வென்ற நாடுகளின் அரண்மனையில் இருந்த பெண்களையும், அவர்கள் கவர்ந்து செல்வார்கள். இதைப் பற்றி யாரிடமும் முறையிட முடியாது.
அதனால், அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களில், திருமணம் ஆகாதவர்களின் நிலை மோசமாகத் தான் இருக்கும். திருமணமான பெண்களும் கைதிகளாக நடத்தப்படுவதுண்டு.
ஆனால், பல பேரரசுகள் போர் தர்மத்தின் படி, போரில் தோற்ற மன்னனைத் தான் அவமானப் படுவத்துவார்களே ஒழிய, அந்த நாட்டின் அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களை, அதிகபட்சமாகக் கைது செய்வார்கள்.
ஆனால், அரண்மனையிலேயே நடக்கும் போர்களில், உயிருக்கும் மானத்திற்கும் உத்திரவாதமில்லாத நிலை தான் இருக்கும்.
அந்த மாதிரியான அசந்தர்ப்பமான நேரங்களில், அரண்மனையில் உள்ள ராணியர் தீக்குளித்து இறந்து விடுவார்கள்.
எதிரிகள் வசம் மாட்டிக் கொள்ள நேரிட்டால், இப்படியும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அதே சமயம், பெண் கேட்டுக் கொடுக்கவில்லை என்றாலும், அதற்காக அந்த நாட்டின் மீது போர் தொடுத்த தருணங்களும், நம் இந்தியாவில் நடைபெற்றிருக்கின்றன.
ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் கோட்டையும், அரண்மனையும் காண்போர் வண்ணம் வியக்கத்தக்கவை.
சூரியனின் நகரம் என்று உதய்ப்பூரை வர்ணிக்கிறார்கள். ஏரிகளின் நகரம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. அதனால், ஏரிக்கரைகளில் அரண்மனையை அந்தக் காலத்தில் மிக அழகுற கட்டி வாழ்ந்திருக்கிறார்கள்.
1599-ஆம் ஆண்டு. மகாராணா உதயசிங் என்பவர் இந்த உதய்ப்பூர் நகரை உருவாக்கினார். பின்னாளில், இந்தப் பகுதி படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்குள்ள பிச்சோலா ஏரிக்கரையில், கட்டப்பட்டுள்ள கோட்டையும், அரண்மனையும் மிகப் பெரியவை.
இங்கு மன்னர்களை மகாராஜா என்று அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக மகாராணா என்று தான் அழைத்திருக்கிறார்கள்.
அது இன்று வரை, மக்களிடையே பேச்சு வழக்கில், மகாராணா என்றே இங்கு ஆண்டு வாழ்ந்து மறைந்த மன்னர்களை, மிக்க மரியாதையுடன் அழைக்கிறார்கள். இது அந்த மண்ணின் மைந்தர்களாகிய மகாராணாக்களுக்கு கிடைத்த கௌரவம்.
இப்பகுதியை ஆண்ட மகாராணா பீம்சிங் என்பவர் மேவார் பகுதியின் அரசன். இவருக்கு ஒரு மகள் இருந்தாள். கிருஷ்ணகுமாரி என்று பெயர்.
ராஜஸ்தானிலேயே, இவள் ஒருத்தி தான் மிகப் பேரழகியாக இருந்தாள். பெண்களே ஆசைப்பட்டு பார்க்கும் அளவிற்கு, சிலை போன்ற அழகு படைத்தவள். இவள் திருமண வயதை எட்டியதும், இவளது சித்திரத்தை, பல ராஜ்ஜியங்களுக்கு அனுப்பி வைத்தான் பீம்சிங்.
இவளது ஒப்பற்ற அழகைக் கண்ட இளவரசர்கள், இவளை மணப்பதற்காகப் போட்டி போட்டனர்.இதில் ஜெய்ப்பூர் மன்னனும், ஜோத்பூர் மன்னனுக்கும் இடையே தான் பலத்த போட்டி இருந்தது. பல மன்னர்கள் வந்து பெண் கேட்ட நிலையில்,
பீம்சிங் தன் மகளை ஜோத்பூர் மன்னனுக்கே திருமணம் செய்ய நிச்சயித்தான். ஜோத்பூர் மன்னனும் பேரழகன். எனவே இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருந்ததால், திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அவ்வளவு போராடியும், கிருஷ்ணகுமாரியைத் தனக்கு கொடுக்கவில்லை என்ற ஆத்திரம் ஜெய்ப்பூர் மன்னனுக்கு அதிகமாக இருந்தது.
இதனால், ஜோத்பூர் மீது படையெடுத்தான். இரண்டு நாடுகளும், அதன் ஆயிரக்கணக்கான படை வீரர்களும் ஒரு பெண்ணுக்காக மோதிக் கொண்டனர். இறுதியல் ஜெய்ப்பூர் மன்னன் போரில் வெற்றி பெற்றான்.
வெற்றிக் களிப்பில், கிருஷ்ணகுமாரியைத் தனக்கு மணம் முடித்துத் தருமாறு, பீம்சிங்கிடம் கேட்டான். ஏற்கனவே நிச்சயமான பெண்ணை, இன்னொருவனுக்குத் திருமணம் செய்யும் வழக்கம், தன் வம்சத்தில் கிடையாது என்று,
பெண் தர மறுத்து தகவல் அனுப்பினான் பீம்சிங். இதனால் கோபம் கொண்ட ஜெய்ப்பூர் மன்னன், அவன் நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதாக மிரட்டினான்.
தன் ஒருத்திக்காக, மேலும் இரு நாடுகளும் சண்டையிட்டு, ஏராளமானோர் மடிவதை அந்தப் பெண் கிருஷ்ணகுமாரி விரும்பவில்லை.
எனவே, நஞ்சை உண்டு தன் உயிரைப் போக்கிக் கொண்டாள். இறுதியில் அவளைக் காலதேவன் தான் தழுவ முடிந்தது.
பீம்சிங் தன் மகளின் நினைவாக, கிருஷ்ண மஹால் என்ற ஒரு கட்டிடத்தையும் உதய்ப்பூர் அரண்மனைக்குள் கட்டினான்.