விமான ஓடுபாதையில் மாடு புகுந்ததால் இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் போன சம்பவம் அஹமதாபாதில் இடம்பெற்றுள்ளது.
இந்திய வீதிகளில் மாடுகள் திரிவது சகஜமே என்றாலும் விமான ஓடுபாதைக்குள் புகும் அளவுக்கு இருக்கும் என்று தாம் நினைக்கவில்லை என்று பயணியொருவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் இருந்து அஹமதாபாத் வந்து சர்வதேச விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. எனினும் ஓடுபாதையில் மாடு ஒன்று ஓடித் திரிவதைக் கண்ட விமானிகள், அங்கு தரையிறங்குவது ஆபத்தானது என்பதால் மும்பை விமான நிலையத்துக்கு விமானத்தை திசைதிருப்பினர்.
இதேபோல், உள்ளூர் சரக்கு விமானம் ஒன்றும் மும்பைக்கே திருப்பப்பட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய விமான நிலைய அதிகார சபை, மேற்படி சம்பவம் உண்மையே என்றபோதும் உடனடியாக மாடு அப்புறப்படுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளது.