மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், வயது முதிர்வு காரணமாக தங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க தனுசுக்கு உத்தரவிடக்கோரியும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, மேலூர் கோர்ட்டில் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
கோர்ட்டில் பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து தனுஷ் தரப்பினர் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனுஷை எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் கதிரேசன் மனு கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக தனுஷ் தரப்பு மீது வழக்கு தொடரப்போவதாக கதிரேசன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனுசுக்கு வக்கீல் நோட்டீசை இன்று அனுப்ப உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் தெரிவித்தார்